ஆகஸ்ட் 24 முதல் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட 47 சாட்சிகளின் சாட்சியங்களும் போதுமானவை என்று அவர் கூறினார்.
சாட்சிகளில் சிறுமியின் பெற்றோர் – மீப் ஜாசெப்ரின் குய்ரின் மற்றும் செபாஸ்டியன் குய்ரின் ஆகியோரும் அடங்குவர்.
“விசாரணையின் ஆரம்பத்தில், எனக்கு நீண்ட சாட்சிகளின் பட்டியல் வழங்கப்பட்டது. நாங்கள் அதை சுருக்கிவிட்டோம். இது ஒரு குற்றவியல் நடவடிக்கை அல்ல. இறந்தவரின் மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண இது ஒரு விசாரணையாகும். எனவே, என்னைப் பொறுத்தவரை, சாட்சிகள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டதோடு, வழங்கப்பட்ட சாட்சியங்களை பொறுத்தவரை, ஒரு தீர்ப்பை வழங்கினால் போதும், ” என்று அவர் கூறினார்.
முன்னதாக, விசாரணையின் போது, 47- வது சாட்சியான, குற்றவியல் விசாரணை அதிகாரி வான் பாரிடா முஸ்டானின், 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 முதல் 14 வரை நடத்தப்பட்ட விசாரணையில் நோரா அன்னின் மரணத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லை என்று கூறினார்.
நோரா அன், 15, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி, அவரும் அவரது குடும்பத்தினரும் மலேசியாவுக்கு இரண்டு வார விடுமுறைக்கு இங்கு வந்த பந்தாயில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலிருந்து காணாமல் போனார்.
நோரா அன்னின் உடல் ஒன்பது நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 13 அன்று, தங்கும் விடுதியிலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் ஒரு மலைப்பாங்கான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.