Home One Line P1 “தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் 30 ஆண்டுகால அனுபவங்கள்” – சென்னை உரையில் முத்து நெடுமாறன் பகிர்ந்தார்

“தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் 30 ஆண்டுகால அனுபவங்கள்” – சென்னை உரையில் முத்து நெடுமாறன் பகிர்ந்தார்

980
0
SHARE
Ad

சென்னை – மலேசியாவின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன் நேற்று புதன்கிழமை மாலை (ஆகஸ்ட் 14) சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒரு தனியார் நூலகமாக மட்டுமின்றி, பல்வேறு அரிய நூல்களையும், ஆவணங்களையும் கொண்ட தமிழ் பண்பாட்டுக் களஞ்சியமாகவும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இயங்கி வருகிறது.

இங்கு நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முத்து நெடுமாறன்,  தமிழ் எழுத்துருகளின் வடிவமைப்புப் பற்றியும் தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தனது அனுபவங்களையும் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுடன்  பகிர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

தமிழ் அச்சுத்துறை வரலாறு குறித்து விளக்கிய அவர் தனது உரையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருவின் தன்மைகள் குறித்தும் ஓலைச்சுவடிகளில் உள்ள வடிவங்களோடு ஓர் ஒப்பாய்வு செய்தும் விளக்கினார்.

தமிழ் எழுத்துருகளில் தடிம வேறுபாடுகள் தோன்றிய விதம் குறித்தும், அவற்றிற்கான காரணங்கள் குறித்தும் தெளிவுபடுத்திய முத்து நெடுமாறன், பயன்பாடுகளுக்கு ஏற்ற எழுத்துரு வடிவாக்கங்கள், தலைப்பு, பனுவல், மேற்கோள் போன்ற நோக்கங்களுக்கு ஏற்ற வடிவங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

அறுபதாம் ஆண்டுகளில், மலேசிய நாளிதழ்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருகள் பற்றியும் பின்னர் கால ஓட்டத்தில் அவை கணினிமயமானது குறித்தும் தனது உரையில் விரிவாகக் குறிப்பிட்ட முத்து நெடுமாறன், தமிழ் எழுத்துருகள் கணினிமயமாக்கப்பட்டதில் தனது பங்களிப்பு குறித்தும் அதன் மூலம் உலக அளவில் கணினியில் தமிழ் மொழியில் ஏற்பட்ட உருமாற்றங்கள், பயன்பாடுகள் குறித்தும் ஆய்வு முறையில் தனது கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.

புதிதாக உருவாக்கம் கண்டுவரும் சில எழுத்துருகளின் செயல்முறைக் காட்சிகளையும் காணொளி வடிவில் முத்து நெடுமாறன் பங்கேற்பாளர்களுக்கு காண்பித்தார்.

முத்து நெடுமாறனின் உரைக்குப் பின்னர் நடந்த கலந்துரையாடலில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் முத்து நெடுமாறன் சுவையான, சுவாரசியமான பதில்களை வழங்கினார்.

ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் கணிசமான அளவில் இந்தக் கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.

படங்கள் : நன்றி – நாணா