கோலாலம்பூர்: இஸ்லாமிய மத போதகரான டாக்டர் ஜாகிர் நாயக் குறித்து முடிவெடுப்பதற்கான ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்க பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்காகக் காத்திருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ள அன்வார் திரும்பி வந்தததும் இது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் நிரந்தர குடியுரிமைப் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லீம் போதகர், ஜாகிர் நாயக், மலேசிய இந்துக்களின் விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்கியதற்கும், சீன மலேசியர்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று பரிந்துரைத்ததற்கும் பெறுவாறான விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளானார்.
இதற்கிடையே, மலேசிய இந்துக்கள் குறித்த கருத்துகள் தொடர்பாக தான் தவறாக காட்சிப்படுத்தப்பட்டதாக ஜாகிர் கூறியுள்ளார். ஆனால், உள்ளூர் சீனர்களைப் பற்றிய தனது கருத்துக்கு இன்னும் எவ்வித கருத்தினையும் அவர் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக ஜசெக மற்றும் பிகேஆர் அமைச்சர்கள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.