கோலாம்பூர்: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் எதிர்ப்பாளர்களை எல்லை மீற வேண்டாம் என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் எச்சரித்துள்ளார்.
“முஸ்லிம்கள் தங்கள் மதத்தைப் பாதுகாப்பதும் அதன் போதகர்களைப் பாதுகாப்பதும் கடமையாகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். எல்லையை மீற வேண்டாம். ஏனென்றால், முஸ்லீம் சகோதரத்துவம் என்பது உரிமைகள், குடியுரிமை, தேசிய எல்லைகள் மற்றும் இனத்தையும் மீறியது.” என்று ஓர் அறிக்கையின் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக் நாடுகடத்தப்பட வேண்டும் என்று கோரப்படும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தற்காப்பதில் ஹாடி இதனைக் கூறினார்.
பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை விட, மலேசிய இந்துக்கள், இந்திய அரசாங்கத்தை ஆதரித்ததாகக் கூறி மக்களிடத்தில் பெரும் குழப்பத்தை ஜாகிர் ஏற்படுத்தினார். மேலும், சீன மலேசியர்களைப் பற்றி அவர் சில வெளிப்படையான கருத்துக்களை வெளியிட்டார். அவர்களை இந்நாட்டின் விருந்தினர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விரண்டு விவகாரங்களும் தவறாகக் குறிப்பிடப்பட்டதாக ஜாகிர் கூறியுள்ளார். ஆயினும், அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்ட காணொளிகள் உள்ளதை மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாஸ் உறுப்பினர்கள் ஜாகீரைப் பாதுகாப்பார்கள் என்றும், பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் ஜாகிர் குறித்த நிலைப்பாட்டிற்கு ஆதரவளிப்பதாகவும் ஹாடி கூறினார்.