வட கொரியா: தென் கொரியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரியாவின் தவறான நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கிடையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக வட கொரியா கூறியுள்ளது.
தென் கொரிய அதிபர் மூன் ஜே–இன் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரைக்கு அளித்துள்ள பதில் அறிக்கையில் இந்த விவகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வட கொரியா தனது இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது.
கொரிய நிலப்பரப்பில் அணு ஆயுதமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்–உன் இடையே கடந்த ஜூன் மாதம் நடந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், இந்த தொடர் ஏவுகணை பரிசோதனைகள் நடைபெற்று வருவது நிலைமை மோசமடையச் செய்யும் எனக் கூறப்படுகிறது.