கோலாலம்பூர்: இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்பும் சிறுபான்மைக் குழுவினரின் தூண்டுதலுக்கு அடிபணிய வேண்டாம் என்று இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அரசு சாரா அமைப்பு பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் கேட்டுக் கொண்டது.
அதன் தலைவர் ஒஸ்மான் அபுபக்கர் கூறுகையில், ஜாகீரை நாட்டில் தங்க அனுமதித்த பிரதமரின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகக் கூறினார்.
ஜாகீரின் அறிக்கையை திரித்து வெளியிட்டதாகக் கூறப்படும் ஐந்து நபர்களுக்கு எதிராக ஒஸ்மான் முன்னதாக சங்க உறுப்பினர்களுடன் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அவர்களின் கருத்துகளால் நாட்டில் அமைதியின்மை மேலோங்கி விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
மனிதவளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமி, கிள்ளாங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சதீஸ் மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகியோர் மீது அவர் புகார் அளித்துள்ளார்.
அவர்கள் ஐவரும் தேசத்துரோக சட்டத்தின் கீழ் விசாரிக்கும்படி ஒஸ்மான் கேட்டுக் கொண்டார்.