கோலாலம்பூர் – மஇகாவின் 73-வது பொதுப் பேரவை இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இங்குள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.
நாடு முழுமையிலும் இருந்து சுமார் இரண்டாயிரம் பேராளர்களும், மஇகா கிளைத் தலைவர்களும் கலந்து கொண்ட இந்த மாநாடு மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ அசோஜனின் வரவேற்புரையோடு தொடங்கியது.
அதைத் தொடர்ந்து தலைமை உரையாற்றி, அதிகாரபூர்வமாக மாநாட்டைத் தொடக்கிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா தனது உறுப்பினர்களின் நலனில் இனி அக்கறை செலுத்தும் என்று கூறினார்.
இந்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிகளும், தமிழ் மொழி வழியான தாய்மொழிப் பள்ளிகளும் நிலைத்து நீடித்திருப்பதற்கு மஇகாவே காரணம் என்றும் தமிழ்க் கல்விக்கும், தமிழ்ப் பள்ளிகளுக்கும் மஇகாவே பாதுகாவலனாகத் திகழ்ந்து வருகின்றது என்றும் மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் இன்றைய மாநாட்டில் உறுதியுடன் தெரிவித்தார்.
காட் அரேபிய வனப்பெழுத்துப் பிரச்சனையில் இதனை தேசிய முன்னணி கொண்டு வந்தது என பழிபோட வேண்டாம் என்று தனதுரையில் கூறிய, நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் இது ஒரு கொள்கைதான் என்றும் விளக்கினார். காட் அமுலாக்கம் நாடாளுமன்ற சட்டம் அல்ல என்றும் இதனை நடப்பு அரசாங்கம்தான் அமுலாக்கம் செய்வதில் மும்முரமாக இருக்கிறது என்றும் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தினார்.