கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை மாலையில் தொடங்கிய மஇகாவின் 73-வது பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா தலைமையகத்திற்குப் பக்கத்தில் காலியாக இருக்கும் நிலத்தை மஇகாவே வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிவித்தார்.
“அண்மையில், டத்தோஸ்ரீ வேள்பாரி மூலமாக அந்த நிலத்தின் உரிமையாளர் டான்ஸ்ரீ ரஷிட்டுடன் சந்திப்பு ஒன்றை நடத்தி அந்த நிலத்தை வாங்குவதற்கு நாங்கள் முடிவெடுத்து விட்டோம்” என விக்னேஸ்வரன் தனது உரையில் கூறினார்.
தற்போது காலியாக இருக்கும் அந்த நிலம், தற்காலிகமாக கார் நிறுத்துமிடமாக செயல்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னர், மஇகா ஹோல்டிங்ஸ் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த நிலம் தனியார் ஒருவரிடமிருந்து மஇகா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அங்கு 32 மாடிக் கட்டடம் கட்டப்படும் என அறிவித்த அப்போதைய மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலு, அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியையும் நடத்தினார்.
ஆனால், ஏதோ காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அந்த நிலம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கைமாறியது. அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்தான் டான்ஸ்ரீ ரஷிட் மனாப். ரஷிட் மனாப் ஒரு வழக்கறிஞரும், பல நிறுவனங்களில் பங்குதாரராகவும், இயக்குநராகவும் இருக்கும் வணிகருமாவார்.
தற்போது இந்த நிலம் மஇகாவுக்கே விற்பனை செய்யப்படவிருக்கிறது என்ற அறிவிப்பை விக்னேஸ்வரன் தனது தலைமையுரையில் மஇகா பொதுப் பேரவை பேராளர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டிருக்கிறார்.
இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் புத்ரா உலக வாணிப மையத்தில் கோலாகலமாகத் தொடங்கிய 73-வது பொதுப் பேரவையின் இரண்டு நாள் மாநாட்டில் நாடு முழுமையிலும் இருந்து பேராளர்களும், மஇகா கிளைத் தலைவர்களும் என சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாள் மாநாட்டில் அம்னோவின் தேசியத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி கலந்து கொண்டு உரையாற்றுவார்.
தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் பாஸ் கட்சியின் தலைவர்களும் நாளைய மாநாட்டில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.