ஈப்போ: பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவியில் இருந்து விடுப்பில் செல்வதாக அறிவித்தார்.
ஓர் அறிக்கையின் வாயிலாக இது குறித்து வெளியிட்ட யோங் தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை விலக்க இந்த விசாரணையில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.
“ஓர் அரசியல்வாதியாக எனது வாழ்க்கை முழுவதும் நான் செய்ததைப் போல, மாநில நலன்களை எனது தனிப்பட்ட நலன்களுக்கு முன்னால் வைக்க வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன். இருப்பினும், வழக்கம் போல் திரோனோ சட்டமன்ற உறுப்பினராக எனது பணிகளைச் செய்வேன்” என்று யோங் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி, பேராக் மாநில ஜசெக பொருளாளராக இருந்த யோங், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376-இன் கீழ் தாம் குற்றவாளி அல்ல என்று மறுப்புத் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 7-ஆம் தேதி இரவு 8.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை மேரு டேசாவில் உள்ள அவரது வீட்டில் அவர் குற்றம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றம் அவரை ஒருவர் உத்தரவாதத்துடன் 15,000 ரிங்கிட் பிணையில் விடுவித்தது.