கோலாலம்பூர்: அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிருபர் பேராசிரியர் பிலிப் ஆல்ஸ்டன் உட்பட பல தரப்பினரின் விமர்சனங்களை மீறி மலேசியா தனது முதல் பறக்கும் கார் திட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் ரிட்சுவான் முகமட் யூசோப் தெரிவித்தார்.
“அத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான எந்தவொரு யோசனைகளையும் ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஐநாவுக்கு அதன் சொந்த கருத்துகள் இருக்கலாம்” என்று முகமட் ரிட்சுவான் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்நாடு புயல்களுக்கு ஆளாகக்கூடியது என்றும், வாகனம் அதிக புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்தும் என்றும், மலேசியாவில் இது நடைமுறைக்கு மாறானது என்று ஆல்ஸ்டனின் அறிக்கையை மேற்கோள் காட்டி அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த பறக்கும் கார் திட்டம் மலேசியாவிற்கான வளங்களையும் நேரத்தையும் வீணடிக்கிறது என்றும், இது காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்குத் தயாராக வேண்டும் என்று ஆல்ஸ்டன் கூறியதாகக் கூறப்படுகிறது.
“இந்த திட்டம் ஒரு தனியார் நிறுவனத்தின் முயற்சி. நீங்கள் தொழில்துறையின் முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் பார்த்தால், அதன் அளவு உலகளவில் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இது ஒரு பெரிய தொழிற்துறை, நாம் இதில் ஈடுபடவும், ஆதரிக்கவும் வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த காரின் முன்மாதிரி ஜப்பானில் ஒரு மலேசிய நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வருகிறது, மேலும் இந்த காரின் அமைப்புப் பணிகள் இப்போது 85 விழுக்காடு நிறைவடைந்துள்ளன.