கோலாலம்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு ஏன் இந்நாட்டில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டது என்று நெகிரி செம்பிலான் மாநில பெர்சாத்து கட்சித் தலைவர் ராயிஸ் யாத்திம் கேள்வி எழுப்பினார்.
“நாட்டின் சட்ட அமைப்பை பின்னுக்குத் தள்ளி, ஒரு நிரந்தர குடியுரிமை அந்தஸ்தை புதிதாக நுழைந்தவருக்கு தருகிறோம். அந்த நபரால் தர முடிந்த என்னவொன்று நம் முப்திகளால் தர இயலவில்லை. சிலரை இஸ்லாத்திற்கு அழைத்து செல்லும் அவரது போக்கா அல்லது மலேசியர்களிடம் இல்லாத அறிவு அவருக்கு இருக்கிறதா? ஏன் என்று தெரிந்து கொள்வதற்கு எனக்கு ஆர்வமாக இருக்கிறது, ஆனால் இன்றுவரையிலும் முடியவில்லை” என்று அவர் கூறினார்.
“அவருக்கு நிரந்தர குடியுரிமை அந்தஸ்து எவ்வாறு கிடைக்கும்?” என்று ராயிஸ் வினவினார்.
கடந்த மாதம் கிளந்தானில் நடந்த ஒரு சொற்பொழிவில் மலேசியாவில் உள்ள சீன மற்றும் இந்திய சமூகங்களை சிறுமை படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்ட பின்னர் ஜாகிர் சர்ச்சைக்கு உள்ளானார்.
நாட்டில் சர்ச்சையைத் தணிக்க ஜாகிரை அவரின் சொந்த நாட்டிற்கே அனுப்ப வேண்டும் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை ராயிஸ் மீண்டும் வலியுறுத்தினார்.
“இந்தோனிசியாவில் ஜாகிருக்கு நல்ல வரவேற்பு இல்லை, அவருக்கு இந்தியாவில் ஒரு வழக்கு உள்ளது. சவுதி அரேபியா அவரை நிராகரித்தது, ஆனால் நாம் ஏற்றுக்கொள்கிறோம். முதலில் அமைதியாக இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். ஜாகிர் முதலில் திரும்பிச் செல்ல விரும்பினால், அது நல்லது,” என்று அவர் கூறினார்.