Home One Line P2 தோக்கியோ உலக எழுத்துருவியல் மாநாட்டில் மறைந்த இந்திய வரிவடிவங்களின் மறுமலர்ச்சி

தோக்கியோ உலக எழுத்துருவியல் மாநாட்டில் மறைந்த இந்திய வரிவடிவங்களின் மறுமலர்ச்சி

1464
0
SHARE
Ad
மேத்தியூ கார்ட்டருடன் முத்து நெடுமாறன்

தோக்கியோ – உலகெங்கும் நடைபெற்றுவரும் எழுத்துருவியல் மாநாடுகளில் மிகப் பழமையானதாகவும் தலையாயதுமாகக் கருதப்படுவது ஏ.டைப்.ஐ. எனப்படும் மாநாடாகும். 63-ஆவது முறையாக சப்பானின் தலைநகரான தோக்கியோவில் செப்டம்பர் 4ஆம் நாள் தொடங்கி 7ஆம் நாள் வரை இந்த மாநாடு நடந்து முடிந்தது.

இந்த மாநாட்டில் மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறனும் கலந்து கொண்டு பட்டறை ஒன்றை நடத்தினார்.

உலகின் பல முன்னணி எழுத்துருவியல் வல்லுநர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மேத்தியூ கார்ட்டர் ஆவார். மிகவும் புகழ்பெற்ற வெர்டானா (verdana), ஜியோர்ஜியா (georgia), டஹோமா (Tahoma) போன்ற எழுத்துருகளை உருவாக்கிய பெருமைக்குரியவர் இவராவார்.

மீட்டி மாயாக் எழுத்துருவில் எழுதப்பட்ட மணிப்புரி ஆவணம். படம் : விக்கிப் பீடியா
#TamilSchoolmychoice

இலத்தீன், சப்பானிய, சீன, கொரிய, தாய்லாந்து, கம்போடிய மொழிகளின் எழுத்துருகள் மீது அழகியல் நோக்கிலும் காலத்திற்கேற்றவாறு மாறிவரும் வடிவங்களின் நோக்கிலும் ஆய்வுக்கட்டுரைகள் தோக்கியோ மாநாட்டில் படைக்கப்பட்டன.

முதல் நாள், 4 செப்டம்பர் அன்று, நடந்த எழுத்துருவாக்கப் பட்டறையில் இந்திய மொழிகளுக்கான எழுத்துருவாக்க விளக்கங்களை மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறனும், அமெரிக்காவைச் சேர்ந்த நோர்பர்ட் லிண்டன்பெர்கும் வழங்கினர்.

மாநாட்டின் ஓர் அங்கமான எழுத்துருவியல் கண்காட்சி

பலவகையான கலை வடிவங்களையும் எழுத்துருவாக்க அணுகுமுறைகளையும் கண்ட இந்த மாநாடு, இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் இரண்டு வரலாற்றுப் புரட்சிகளைக் குறித்தும் விவாதித்தது.

இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில், மணிப்புரி மொழியின் சொந்த வரிவடிவம் மீட்டெடுக்கப்படுவதைப் பற்றியும், நேப்பாளத்தில் அவர்களின் சொந்த வரிவடிவமும் பயன்பாட்டில் இருந்து மறைந்த இரஞ்சனா வரிவடிவமும் மீட்டெடுக்கப்படுவது குறித்தும் இருவேறு கட்டுரைகள் படைக்கப்பட்டன.

மீட்டி மாயாக் எழுத்துகள் உடலில் உள்ள அங்கங்களைக் குறிக்கும் வடிவங்கள் என்பதை விளக்குகிறார் கட்டுரையாளர் நீல் ஆக்காஷ்

மணிப்புரி மொழியின் சொந்த வரிவடிவத்தின் பெயர் ‘மீட்டி மாயக்’ 18ஆம் நூற்றாண்டில் மணிப்பூரை ஆண்ட அரசன்,  மதமாற்றத்தின் காரணமாக அந்த வரிவடிவத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்து வங்காள எழுத்துருவைப் பயன்படுத்த உத்தரவிட்டான். அன்றுமுதல் மீட்டி மாயக் எழுத்துரு பயன்பாட்டில் இருந்து மறைந்தது. ஆர்வம் உள்ள சிலரால் மட்டுமே மறைமுகமாகப் பாதுகாக்கப்பட்டுவந்த ஆவணங்களைக் கொண்டு இந்த எழுத்துருவை மீட்டெடுத்துள்ளனர். தற்போது இந்த எழுத்துரு மணிப்பூர் மாநிலத்தின் அலுவல் முறை எழுத்துருவாக இருக்கின்றது. பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. நீல் ஆக்காஷ் ஏனும் புகழ் பெற்ற மணிப்பூர் எழுத்துருவாளர் இந்தக் கட்டுரையை சிறப்பாகப் படைந்தார்.

இரஞ்சனா எழுத்துருவின் மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசிய சுனித்தா டங்கோலும் ஆனந்தா மஹார்ஜனும்

நேபாளத்தில் பயன்பாட்டில் இருந்து மறைந்த இரஞ்சனா எழுத்துரு பற்றியும் இதனை மறுபயனீட்டிற்குக் கொண்டுவரும் முயற்சிகளைப் பற்றியும் அந்த நாட்டில் இருந்து கலந்து கொண்ட எழுத்துருவாளர்களான ஆனந்தா மஹார்ஜனும் சுனித்தா டங்கோலும் வழங்கினர். அனைவரின் நெஞ்சைத் தொட்ட இந்தக் கட்டுரை, பல படங்களையும் காணொளிகளையும் கொண்டிருந்தது.

அடோபி போட்டோஷாப் தொழில்நுட்பக் குழுத்தலைவர் வினோத் பாலகிருஷ்னண்

உலக எழுத்துருவாக்கக் கலை வளர உதவிவரும் ஏ.டைப்.ஐ. மாநாட்டின் 64ஆவது மாநாடு அடுத்த ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரிலும், அதற்கடுத்த ஆண்டு சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம்சிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் இருந்து வந்த கட்டுரையாளர் சுமாந்திரி சமாரவிக்ரம
சிறுபான்மை எழுத்துருகளின் முக்கியத்துவம் குறித்த, மோனோடைப் நிறுவனத்தின் சாக்கிரியின் உரை அனைவரையும் கவர்ந்தது
மூர்த்தி இந்திய இலக்கிய நூல்களின் பதிப்புத்திட்டம் குறித்து கட்டுரை வழங்கிய முனைவர் இரத்தினா இராமனாதன்.