கோத்தா கினபாலு: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) அரசியல் கருவியாகப் பயன்படுத்த நினைக்கும் தரப்புகளுக்கு அதன் தலைவர் லத்தீஃபா கோயா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் எம்ஏசிசி நியாயமாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரின் அறிக்கையைத் தொடர்ந்து அவர் இதைக் குறிப்பிட்டார்.
“நீண்ட காலமாக எம்ஏசிசி ஓர் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவரை வீழ்த்த அறிக்கைகளை தாக்கல் செய்கிறார்கள். நாங்கள் தொழில் ரீதியாக செயல்பட முயற்சி செய்கிறோம். அரசியல் தளத்திற்கு எங்களை பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை.” என்று அவர் குறிப்பிட்டார்.
சபா எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ டாக்டர் ஜெஃப்ரி கிட்டிங்கானை மேற்கோள் காட்டி அண்மையில் வந்த கட்டுரைக்கு லத்தீஃபா பதிலளித்தார். 2017-ஆம் ஆண்டில் ஷாபி சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு பரிசீலிக்கப்படும் என்று ஜெஃப்ரி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ரப்பர் தொழில் சிறு உரிமையாளர்கள் மேம்பாட்டு ஆணையம் (ரிஸ்டா) சம்பந்தப்பட்ட நில விற்பனை வழக்கின் விசாரணையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் ஜெஃப்ரி அழைப்பு விடுத்திருந்தார்.
“யார் ஆட்சிக்கு வந்ததாலும் எதுவும் நின்றுவிடப்போவதில்லை. ஆரம்ப புகாருக்கு அப்பால் வழக்கு தொடரவில்லை என்றால் மட்டுமே நாங்கள் நிறுத்துவோம். அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். நிச்சயமாக, அறிக்கையின் அடிப்படை என்ன என்பதை முதலில் நாங்கள் பார்ப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.