கோலாலம்பூர் – தரமான படங்களை மட்டும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் எடுத்து வரும் இயக்குநர் சசி, ‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பின்னர் நீண்ட இடைவெளி தந்து வழங்கியிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.
எல்லா இயக்குநர்களும் வழக்கமாக சொல்வது இது வித்தியாசமான கதை என்றாலும், உண்மையிலேயே வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சசி. போக்குவரத்துக் காவல் துறை அதிகாரியாக சித்தார்த், சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயக்காரராக ஜி.வி.பிரகாஷ் என படத்தின் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களுமே தமிழ்ப் படங்கள் இதுவரை காணாத கதாபாத்திரங்கள்.
அக்காள் தம்பி உறவைச் சொல்ல வந்ததுபோல் தொடங்கும் படத்தின் திரைக்கதை சொல்ல வருவது என்னவோ மாமன்-மச்சான் உறவை! அதுவும் தமிழ்த் திரைப்படங்கள் இதுவரை சொல்லாத ஒரு கோணத்தில்!
எப்படி அந்த உறவை விவரித்திருக்கிறார்கள் என்பதை விமர்சனமாகச் சொல்வதைவிட படத்தில் நேரில் பார்ப்பது இன்னும் கூடுதல் சுவாரசியத்தைத் தரும்.
கவரும் அம்சங்கள்
முதல் முறையாக சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தைத் திரையில் தெறிக்க விட்டிருக்கிறார்கள். படத்தின் மையக் கதையே மோட்டார் சைக்கிள் பந்தய ஓட்டிகளிடையே நிகழும் மோதல்கள்தான். ஆக்ரோஷமான, வில்லத்தனமான மோட்டார் சைக்கிள் பந்தயக்காரர்களின் இன்னொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
சசியின் கதைக் களத்திற்கு துணைநிற்பது ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமாரின் கேமரா. சாலைகளில் கன்னாபின்னாவென்று பறக்கும் மோட்டார் சைக்கிள்களை மேலிருந்து படம் பிடித்ததிலும், சாலைகளின் முனைகளில் விரட்டிச் செல்வதிலும், சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இடையிலான துரத்தல்களின் போதும் ஒளிப்பதிவாளரின் கேமரா படத்தின் விறுவிறுப்பையும் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
அதற்கேற்றாற்போல் படத் தொகுப்பைக் கவனித்துக் கூடுதல் விறுவிறுப்பூட்டுகிறார் படத் தொகுப்பாளர் சான் லோகேஷ்.
ஆனால், சித்து குமார் இசையில் பாடல்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசையும் நெஞ்சில் பதியவில்லை. கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நடிப்பைப் பொறுத்தவரைத் தனித்து நிற்கிறார் மதனாக வரும் ஜி.வி! இத்தனை சிறிய உடம்புக்குள் அத்தனை விதமான நுணுக்கமான முகபாவனைகளா என வியக்க வைக்கிறார். சித்தார்த்தை விட அதிகமான வாய்ப்பு ஜிவிக்குத்தான். பலவிதமான மனப் போராட்டங்களை, குமுறல்களை, உள்ளக் கிடக்கைகளை அற்புதமாக தனது நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சித்தார்த்தும் போக்குவரத்துக் காவல் துறை அதிகாரி ராஜசேகராக, கதைக்குத் தேவையான கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். வழக்கமான தமிழ்நாட்டு போலீஸ்காரர் போல் இல்லாமல் தொப்பையே கொஞ்சமும் தெரியாத கம்பீரமான உடற்கட்டோடு மிடுக்காகத் தோன்றுகிறார்.
ஜிவி பிரகாஷூக்கு இணையாக வரும் புதுவரவான காஷ்மீரா பர்டேஷி பளிச்சென முதல் காட்சியிலேயே கவர்கிறார். தமிழ்ப் படவுலகில் ஒரு சுற்று வர வாய்ப்பிருக்கிறது.
ஜிவிக்கு அக்காவாகவும், சித்தார்த்துக்கு இணையாகவும் வரும் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் இன்னொரு புதுவரவு. அந்தப் பாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்தியிருக்கிறார். முக பாவங்களை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பலவீனங்கள்
முக்கால்வாசிப் படத்தை அழகான குடும்ப உறவுகளோடு கொண்டு செல்லும் இயக்குநர் கடைசி அரை மணி நேரத்தில் வழக்கமான தமிழ்ப் பட இயக்குநராக சமரசமாகிவிட்டார். குட்கா, கஞ்சா கடத்தும் கடத்தல்கார தாதா, அவருக்குத் துணையாக நிற்கும் காவல் துறையின் உயர் அதிகாரிகள், என வழக்கமான மசாலாவுக்குள் புகுந்து விட்டார்.
ஜிவி, சித்தார்த் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை வரும்போது, எவ்வளவோ அழகான சம்பவங்களைப் புகுத்த இயக்குநருக்கு வாய்ப்பிருந்தும் அதைத் தவறவிட்டதுபோல் தோன்றுகிறது. உதாரணமாக, சித்தார்த் ஜிவிக்காக சுடும் சின்னச் சின்ன தோசைகள் சம்பவம். இதைப் போல சில சம்பவங்களைப் புகுத்தி, வீட்டுக்கு வெளியே நடக்கும் வில்லன், குட்கா வகையறாக்களைக் குறைத்திருந்தால், இன்னும் வித்தியாசமான படமாக பரிணமித்திருக்கக் கூடும்.
அதிலும் இறுதிக் காட்சியில் புதர்கள் மட்டுமே மண்டிய ஒரு சிறிய இடத்தில் வில்லன்கள் துப்பாக்கி, ஆயுதங்களோடு சித்தார்த், ஜிவியைத் தேடிக் கொண்டிருக்க இவர்கள் இருவரும் காயங்களோடு பக்கம் பக்கமாக வசனம் பேசிக் கொண்டும், கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டும், அதே கைத்தொலைபேசியில் வீடியோ படம் பார்த்துக்கொண்டும் இருப்பது மிகப் பெரிய சறுக்கல். இந்த இடத்தில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கடந்த வாரம் தமிழ்நாட்டில் வெளியாகி நல்ல வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை ஏனோ ஒருவாரம் கழித்துத்தான் மலேசியாவில் திரையிடப்பட்டிருக்கிறது.
மாமன் – மச்சான் உறவு முறையை வித்தியாசமான முறையில் கதைக்களமாகச் சொல்லியிருக்கும் விதத்துக்காகவே படத்தைப் பார்க்கலாம் – இரசிக்கலாம்!
பார்க்கும் ஒருசில மாமன் – மச்சான்கள் மனம் மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.