கூச்சிங்: கூச்சிங்கில் ஏற்பட்ட புகை மூட்டம் உலகின் மிக மோசமான காற்று மாசு குறியீட்டைக் கொண்ட முதல் 10 நாடுகளில் மலேசியா இடம்பிடிப்பதற்கு காரணமாகி இருப்பதாக உலக காற்றின் தர குறியீட்டு திட்ட (World Air Quality Index- WAQI) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பதிவிட்டுள்ள வலைத்தளத்தின் தரவுகளின்படி, மிக மோசமான காற்று மாசு குறியீட்டைக் கொண்ட நகரங்களின் பட்டியலில், மலேசியா தற்போது காலை 11 மணியளவில் நான்காவது இடத்தில் உள்ளதாக அது தெரிவித்துள்ளது. அதாவது கூச்சிங்கில் 272-ஆக காற்று மாசுபாடு குறியீடு பதிவாகி உள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை நான்காவது இடத்திற்கு வருவதற்கு முன்பு மலேசியா மிக உயர்ந்த ஏபிஐ வாசிப்பைக் கொண்ட நகரமாக பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தோனிசியாவின் சுமத்ரா மற்றும் களிமந்தான் ஆகியவற்றில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, எழுந்த அடர்ந்த புகையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.
இந்தோனிசியா சிம்பாங்கில் 442-ஆக காற்று மாசுபாடு குறியீடு பதிவாகி உள்ளது. வயல்லாவில் 592-ஆக காற்று மாசுபாடு பதிவாகி உள்ள நிலையில், ஆஸ்திரேலியா தற்போது முதலிடத்தில் உள்ளது.