கோலாலம்பூர்: நாட்டில் பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்புவதில் யாரேனும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் காவல் துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிந்தனைகளை ஊக்குவிப்பவர்களும் இதில் அடங்குவதாக அப்துல் ஹாமிட் கூறினார்.
பினாங்கு துணை முதலமைச்சர் பி. இராமசாமி மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் இடம்பெற்ற பழைய காணொளியை மீண்டும் பரவலாகப் பகிர்ந்ததன் தொடர்பில் கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
“அது ஒரு பழைய காணொளி. தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். இந்த காணொளியைத் தவிர வேறு பல வழக்குகள் உள்ளன. இதற்குப் பிறகு எச்சரிக்கை இல்லை. இனம், மதம் மற்றும் அரசு நிறுவனம் சம்பந்தப்பட்ட எந்தவொரு தூண்டுதலுக்கும் எதிராக நான் நடவடிக்கை எடுப்பேன். காவல் துறை நியாயமாக செயல்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ சார்பு காணொளியைச் சுற்றியுள்ள பிரச்சனை ஏற்கனவே விசாரிக்கப்பட்டு அமைச்சக நிலைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அப்துல் ஹாமிட் கூறினார்.
“உண்மையாக இருந்தால், அனைத்துலக பயங்கரவாத அமைப்புகளை மகிமைப்படுத்தும் செயல் நம் நாட்டிற்கு பொருந்தாது என்பதால் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.
பேராசிரியர் இராமசாமி மற்றும் இந்திய தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பு அரசியல்வாதி வி. கோபாலசாமி ஆகியோர் இடம்பெற்றிருந்த பழைய காணொளி தொடர்பாக கடந்த ஜூலை மாதம் காவல் துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் இராமசாமி உறவில் இருப்பதாக இந்த காணொளி குற்றச்சாட்டுகளைத் தூண்டியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக இராமசாமி கூறியிருந்தார்.