சிரம்பான் – நாட்டின் இளம் இலக்கியப் படைப்பாளர்களில் விமர்சனக் கட்டுரைகள் மூலம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் இரா.சரவண தீர்த்தாவின் கைவண்ணத்தில் மலர்ந்திருக்கும் “ஊதா நிற தேவதைகள்” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை செப்டம்பர் 28-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப் பள்ளியில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ப.பவித்தாரா நூல் அறிமுகம் செய்கிறார். தெள்ளியர் ஒன்றியம் இயக்கத்தின் துரை எழில் சிறப்பு வருகை புரிகிறார்.
திரைப்படங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை ‘ஊதா நிற தேவதைகள்’ நூல் உள்ளடக்கியிருக்கிறது.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்துமே “உலக சினிமாவில் பெண்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை குறித்த உரையாடல் எனலாம்” என்று நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் சரவண தீர்த்தா, மேலும் “சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களைப் பற்றிப் பேசாமல் அதற்குள் சொல்லப்பட்டிருக்கும் அரசியலை இயக்குநர் எப்படிக் காட்சிப்படுத்தி பார்வையாளனுக்குச் சொல்கிறார் என்பதை இக்கட்டுரைகளின் வழி சொல்ல முயற்சித்திருக்கிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.