Home One Line P1 தஞ்சோங் பியாய் : மீண்டும் களம் காண மசீச தயார்! பக்காத்தான் வெல்ல முடியுமா?

தஞ்சோங் பியாய் : மீண்டும் களம் காண மசீச தயார்! பக்காத்தான் வெல்ல முடியுமா?

1225
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : (நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் மசீச மீண்டும் போட்டியிடுமா? அம்னோவுக்குத் தொகுதியை விட்டுக் கொடுக்குமா? நம்பிக்கைக் கூட்டணி இங்கு மீண்டும் வெல்ல முடியுமா? செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது பார்வையில் வழங்கும் கண்ணோட்டம்)

பிரதமர் துறை துணை அமைச்சராக இருந்த  டத்தோ வீரா டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் தனது 42-வது வயதில் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து ஜோகூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் களம் பல்வேறு அரசியல் சுவாரசியங்களையும், திருப்பங்களையும் காணவிருக்கிறது.

கடந்த பொதுத் தேர்தலில் இங்கு தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மசீச சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே – 524 வாக்குகள் பெரும்பான்மையில்தான் – நம்பிக்கைக் கூட்டணியின் பெர்சாத்து கட்சியின் சார்பில் போட்டியிட்ட முகமட் பாரிட்டின் தோல்வி கண்டது. முகமது பாரிட் 21,255 வாக்குகள் பெற, மசீசவின் வீ ஜீ செங் 20,731 வாக்குகள் பெற்றார்.

#TamilSchoolmychoice

பெரும்பான்மை 524 என்றாலும், இங்கு போட்டியிட்ட பாஸ் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 2,962 வாக்குகள் பெற்றிருக்கிறது. தற்போது அம்னோவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஸ் கட்சி எதிர்வரும் இடைத் தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணிக்கு ஆதரவு தந்து, இந்த 2,962 வாக்குகளை அவர்கள் பக்கம் திருப்பி விட்டால் தேசிய முன்னணி – மசீச இங்கு எளிதாக வெற்றி பெற முடியும்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம் – 2018 முடிவுகள் – (வரைபடம் நன்றி : Undi-info)

தஞ்சோங் பியாய் தொகுதியில் மீண்டும் களம் காண மசீச தயாராக இருக்கிறது என மசீச துணைத் தலைவர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்ததும் தங்களின் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அம்னோ-பாஸ் கூட்டணிக்கு ஆதரவு தராமல், இதுவரைத் தயக்கம் காட்டி வந்த மசீச தற்போது தஞ்சோங் பியாய் தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டுமென்றால், பாஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் அது முடியாது என்ற இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

எனினும், இறுதிக் கட்டத்தில் இந்த மாதம் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற அம்னோ-பாஸ் கூட்டணி மாநாட்டுக்குத் தனது பிரதிநிதியை அனுப்பி வைத்து ஆதரவுக் கரம் நீட்டியதன் மூலம், சில நாட்களுக்கு முன் பாஸ் கட்சியுடன் ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்தியிருந்த  மசீசவுக்கு அதன் பலனும், சாதகமான தாக்கமும் இவ்வளவு சீக்கிரத்தில் தன்னை வந்தடையும் என அந்தக் கட்சி எதிர்பார்த்திருக்காது.

மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி தஞ்சோங் பியாய். எனவே, தேசிய முன்னணி சார்பில் அம்னோவே மீண்டும் இங்கு போட்டியிட முயற்சி எடுக்குமா? – அதற்கேற்ப மசீச விட்டுக் கொடுக்குமா? – அல்லது தேசிய முன்னணியின் பாரம்பரியமான கொள்கைகளுக்கு ஏற்ப மசீசவே போட்டியிட அம்னோ ஆசி வழங்குமா? – என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

அடுத்த ஓரிரு நாட்களில் தேசிய முன்னணி, எந்தக் கட்சி தஞ்சோங் பியாய் தொகுதியில் போட்டியிடும் என்ற முடிவை எடுக்கும். அநேகமாக மசீசவுக்கே இங்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு மசீச மீண்டும் இங்கு போட்டியிட்டால், கடந்த பொதுத் தேர்தலில் மோசமானத் தோல்விகளைச் சந்தித்த அந்தக் கட்சி மீண்டும் உயிர்த்தெழ – தனது முக்கியத்துவத்தை நிலைநிறுத்திக் கொள்ள – ஒரு வாய்ப்பாக தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் அமையும்.

நம்பிக்கைக் கூட்டணிக்கு மாபெரும் சவால்

அதே வேளையில் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பல முனைகளில் மாபெரும் சவால்களைச் சந்திக்கும் இக்கட்டான நிலைக்கு பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது.

முதலாவது, இந்தத் தொகுதியை மீண்டும் வென்று சரிந்து வரும் தங்களின் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம்.

இரண்டாவது, கடந்த முறை வென்றெடுத்த ஜோகூர் மாநிலத்தில் தங்களின் செல்வாக்கும், மக்கள் ஆதரவும் இன்னும் குறையவில்லை என நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

மூன்றாவது, இங்கு போட்டியிடப் போவது பெர்சாத்து கட்சி. பெர்சாத்து கட்சியும் ஜோகூர் மாநிலத்தில் தனது செல்வாக்கைக் காட்ட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது.

நான்காவது நெருக்கடி ஜசெகவுக்கு! சுமார் 42 விழுக்காடு சீன வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணிக்கு சீன வாக்குகளைப் பெற்றுத் தர வேண்டியப் பொறுப்பு ஜசெகவின் தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது.

மசீச இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றால், அது ஜசெகவின் தோல்வியாகவும் கருதப்படும். மீண்டும் அரசியல் களத்தில் மசீசவின் செல்வாக்கு  தஞ்சோங் பியாய் வெற்றியால் உயரும் நிலை வந்தால், தனது பாரம்பரிய அரசியல் போராட்டத்தை மசீசவோடு தொடர்ந்து அது நிகழ்த்த வேண்டியதிருக்கும்.
ஐந்தாவது நெருக்கடி ஏற்படப் போவது அன்வார் இப்ராகிமுக்கு! அடுத்த பிரதமர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அவர் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் கடுமையாக இறங்கி பாடுபடுவார் என்பதில் ஐயமில்லை. அடுத்த பிரதமராக தான் வரும் சூழ்நிலையில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றும் ஆற்றலும், வியூகமும் தன்வசம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் – தனக்கான ஆதரவையும், செல்வாக்கையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் – அன்வாருக்கு இந்த இடைத் தேர்தல் மூலம் ஏற்பட்டிருக்கிறது.
இப்படியாக பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கியுள்ளது நம்பிக்கைக் கூட்டணி. தஞ்சோங் பியாய் தேர்தல் முடிவு மேற்குறிப்பிட்ட பல கேள்விகளுக்கு விடைகாணும் என்பதோடு, புதிய அரசியல் கேள்விகளையும், ஆரூடங்களையும் உருவாக்கும்.
இந்த இடைத் தேர்தலில் மஇகாவுக்கு இங்கு அதிகம் வேலையிருக்கப் போவதில்லை, காரணம், இந்திய வாக்காளர் எண்ணிக்கை வெறும் ஒரு விழுக்காடுதான். இருந்தாலும், கடுமையான போட்டியில் அந்த ஒரு விழுக்காட்டு இந்திய வாக்குகளை  தேசிய முன்னணியின் பக்கம் கொண்டு வருவதற்கு மஇகாவும் தீவிரமாகப் பாடுபடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

-இரா.முத்தரசன்