கோலாலம்பூர்: மேஜர் முகமட் ஜாகிரின் மரணம் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து என்று மலேசிய இராணுவம் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
மலேசிய இராணுவ விசாரணைக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் மற்றும் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.
“பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் நல்ல நிலையில் இருப்பதையும் வாரிய உறுப்பினர்கள் கண்டறிந்தனர். மலேசிய இராணுவம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும், அதே நேரத்தில் நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) தேவைக்கேற்ப புதுப்பிக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில், மலேசிய மூத்த நகைச்சுவை நடிகர் ஏ.ஆர்.படோலின் மகன் கோத்தா கினபாலு லோக் காவி இராணுவ முகாமில் நடந்த கண்காட்சியின் போது அசல் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமுற்றார்.
லோக் காவி இராணுவ முகாமில் 13-வது படைப்பிரிவு மற்றும் 5-வது காலாட்படைப் பிரிவைத் தொடங்குவதை முன்னிட்டு நடைபெற்ற இராணுவ கண்காட்சியில் மேஜர் முகமட் ஜாகிர் கலந்து கொண்டார்.