கோலாலம்பூர்: தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவன் அரசியல்வாதிகள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 25 வரை இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட இருந்த சந்தேகநபர்களை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் சிறப்புக் கிளை (இ8) உதவி காவல்துறைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
அச்சந்தேகநபர் மலேசியர்களையும் இந்தோனிசியர்களையும் ஆட்சேர்ப்பு செய்வதிலும், சலாபி ஜிஹாதி அல்லது டாயிஸ் சித்தாந்தத்தை பரப்புவதிலும் சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுவதாக அவர் கூறினார்.
“அவர்கள் எதிர்காலத்தில் மலேசியா மற்றும் இந்தோனிசியா மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். சந்தேகிக்கப்படும் மலேசிய குடிமகன் மலேசியாவில் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் மீது, முஸ்லிம்களை ஒடுக்குதல் மற்றும் முஸ்லிம்கள் மீது எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளார்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும், பிலிப்பைன்ஸின் தெற்கில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பல சந்தேக நபர்களும் இதே நடவடிக்கையில் சபாவின் கெனிங்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், “சீக்கியர்களுக்கான நீதி” என்ற பிரிவினைவாத குழுவின் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஓர் இந்திய நாட்டைச் சேர்ந்தவரை கைது செய்துள்ளதாகவும் அயோப் வெளிப்படுத்தினார்.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 38 வயது பெண் நிதி திரட்டலில் ஈடுபட்டதாகவும், அந்நிதியை அக்குழுவிற்கு விநியோகித்ததாகவும் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.
“கைது செய்யப்பட்ட நபர் இந்திய அதிகாரிகளால் வேண்டப்படுவதால், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்,” என்று அவர் மேலும் கூறினார்.
16 சந்தேக நபர்களில், மூன்று உள்ளூர் குடிமக்களும், 12 இந்தோனிசியர்கள் மற்றும் ஓர் இந்தியர் என்று அயோப் கூறினார்.