Home One Line P1 தஞ்சோங் பியாய் : அம்னோவுக்கு கைமாறுகிறது! முன்னாள் மந்திரி பெசார் போட்டியிடலாம்!

தஞ்சோங் பியாய் : அம்னோவுக்கு கைமாறுகிறது! முன்னாள் மந்திரி பெசார் போட்டியிடலாம்!

795
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தஞ்சோங் பியாய் தொகுதியில் மசீசவுக்குப் பதிலாக அம்னோ போட்டியிடும் என்றும், அங்கு ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் காலிட் நோர்டின் (படம்) போட்டியிடுவார் என்றும் ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.

பாரம்பரியமாக மசீச தஞ்சோங் பியாய் தொகுதியில் போட்டியிட்டு வந்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் கடுமையான சூழலிலும் வெறும் 542 வாக்குகள் வித்தியாசத்திலேயே நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான பெர்சாத்து கட்சியின் முகமட் பாரிட்டிடம் மசீச தோல்வி கண்டது. முகமட் பாரிட்டின் அகால மரணத்தினால் இங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த முறை இந்தத் தொகுதியை தேசிய முன்னணி வென்று காட்ட வேண்டும் என்ற சிந்தனை தேசிய முன்னணி வட்டாரங்களில் நிலவுவதால் மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தஞ்சோங் பியாய் தொகுதியில் அம்னோவே போட்டியிட வேண்டும் என்ற நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

#TamilSchoolmychoice

ஜோகூர் அம்னோவின் 88 கிளைகள் இணைந்து இந்தத் தொகுதியில் அம்னோ வேட்பாளரே போட்டியிட வேண்டும் என கடந்த சனிக்கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

எனினும் மசீச தஞ்சோங் பியாய் தொகுதியை விட்டுக் கொடுக்குமா – இதனால் அம்னோ, மசீச இடையில் பூசல்கள் எதுவும் எழுமா? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரையில் இல்லை.

தஞ்சோங் பியாய் தொகுதியில் பெர்சாத்து கட்சியில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. பெர்சாத்து சார்பில் மலாய் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்பதால், மசீச வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரது வெற்றி வாய்ப்புகள் குறையலாம் என்ற கருத்து தேசிய முன்னணி கட்சிகளிடையே நிலவுகிறது.