கோலாலம்பூர்: சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை அவமதித்ததாகக் கூறப்படும் ஒரு சமூக ஊடக இடுகை குறித்து தமது வாக்குமூலத்தை அளிக்க பேராக் ஜசெக தலைவர் ங்கா கொர் மிங் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செலவிட்டார்.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை முதன்மை உதவி இயக்குநர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட், ங்கா தமது வாக்குமூலத்தை அளித்திருப்பதை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவருக்கு, இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் காவல்துறையினர் ங்காவை மீண்டும் அழைப்பார்கள் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ஊடகங்களுடன் பேசிய ங்கா, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் முகநூல் பக்கத்தில், அவதூறு செய்யும் நோக்கில் போலி செய்திகளை வெளியிட்டதை விசாரிக்குமாறு காவல் துறையினரை வலியுறுத்தினார்.
“இந்நாட்டு குடிமக்கள் சட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், விசாரணை வழக்கில் காவல்துறைக்கு உதவ நான் வந்தேன். குற்றவியல் அவதூறு செய்ய முயற்சிப்பதன் மூலம் போலி செய்திகளை வெளியிட்டதாக நான் கண்டறிந்த நஜிப் ரசாக் பக்கத்தை விசாரிக்க புக்கிட் அமானை நான் கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீதியும் உண்மையும் நிலைநிறுத்தப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை வெறுக்கக் கூறி சீனர்களைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘ங்கா கொர் மிங் சூப்பர் பேன்ஸ் கிளப்’ முகநூல் கணக்கு உரிமையாளருக்கு எதிராக சிலாங்கூர் சுல்தானின் பாதுகாவலர் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.