கோத்தா கினபாலு: எதிர்காலத்தில் போர்னியோ பகுதியில் ஒரு தனியார் விமான சேவையை நிறுவுவது குறித்து ஆய்வு செய்ய சபா மற்றும் சரவாக் அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக சபா மற்றும் சரவாக் மாநில முதல்வர்களான டத்தோஶ்ரீ முகமட்ஷாபி அப்டால் மற்றும் டத்தோ அபாங் ஜொஹாரி ஒபெங் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டுமானம் பலருக்கும் பயனளிக்கும் என்று அவர்கள் கூறினர்.
சபா மற்றும் சரவாக் எல்லையிலுள்ள, கலிமந்தானுக்கு இந்தோனிசிய தலைநகரம் மாற்றப்பட்டது, மேலும் இப்பகுதியின் வளர்ச்சியை மேன்படுத்தும் சாத்தியமுள்ளது என்று முகமட் ஷாபி கூறினார்.
போர்னியோவில் இவ்விரண்டு மாநிலங்களை உள்ளடக்கிய விமான நிறுவனங்கள், போக்குவரத்து இடைவெளியைக் குறைக்கவும் உதவியாக செயல்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இத்திட்டம் குறித்து சரவாக் மாநில முதல்வர் ஜொஹாரி கருத்து தெரிவிக்கையில், இது நாடு முழுவதிலும் சுற்றுலா நடவடிக்கைகளையும் தூண்டும் என்று கூறினார்.
“மலேசியாவில் குறிப்பாக சபா மற்றும் சரவாக்கில் ஒரு விமான சேவையை நிறுவுவதற்கு நாங்கள் ஓர் ஆய்வினை செய்ய பரிந்துரைத்தோம். இது சுற்றுலா மற்றும் இப்பகுதியில் நாம் உருவாக்கக்கூடிய பல மையங்கள் அல்லது மையங்களுக்கிடையேயான இணைப்பை அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.
சபா சொந்தமாக சபா ஏர் ஏவியேஷன் செண்டெரியான் பெர்ஹாட் விமான உரிமத்தை வைத்திருக்கிறது. சரவாகில் ஹார்ன்பில் ஸ்ஸ்கைவேஸ் செண்டெரியான் பெர்ஹாட் இயங்கி வருகிறது.