இலண்டன் : பிரெக்சிட் திட்டத்திற்கு எழுந்த சிக்கல்களைத் தொடர்ந்து பிரிட்டன் பொதுத் தேர்தலை முன்கூட்டியே டிசம்பர் 12-ஆம் தேதி நடத்த முயற்சிகள் எடுத்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அந்த முன்னெடுப்பில் தோல்வி அடைந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கு 70 உறுப்பினர்கள் வாக்களித்த வேளையில் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து 299 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது.
எனினும், தனது முயற்சியைக் கைவிட்டு விடாமல் தொடர்ந்து மற்றொரு மசோதாவைச் சமர்ப்பித்து அதன் மூலம் டிசம்பர் 12-ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த போரிஸ் ஜோன்சன் உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையில் பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக் கெடுவை அக்டோபர் 31-ஆம் தேதியிலிருந்து ஜனவரி 31-ஆம் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியம் நீட்டித்திருக்கிறது. அதற்கு மேல் கால நீட்டிப்பு வழங்க முடியாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது.