கோலாலம்பூர்: பகாங்கில் அமைந்துள்ள கம்போங் பாரு சீனா குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகள் தீயில் சேதமுற்றதை மாட்சிமைத் தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா இன்று புதன்கிழமை பார்வையிட்டார்.
255-வது அரசு பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிறகு அவர், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் சுமையை குறைக்க மாமன்னர் நிதி உதவி வழங்கியுள்ளார். இன்று காலை நடந்த இந்த தீ சம்பவத்தில், மொத்தம் 14 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.
முன்னதாக, பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோர் ஹிஷாம் முகமட் கூறுகையில், இச்சம்பவத்தின் போது காயங்கள் அல்லது இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“அதிகாலை 1.05 மணியளவில் தீ ஏற்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் 30 நிமிடங்களுக்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதுவரை, தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்புகளின் அளவு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.