கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஏ.கலைமுகிலன், அதன் முன்னாள் பிரிவுத் தலைவராக இருந்ததாக கெப்போங் பிகேஆர் ஒப்புக் கொண்டது.
குற்றம் சாட்டப்பட்ட கலைமுகிலனின் மனைவி, தமது கணவருக்கு ஆதரவாக பேச வேண்டுகோள் விடுத்தும், அவர் நிரபராதி என்று குறிப்பிட்ட போதும், இதில் பிகேஆர் சம்பந்தப்படாது என்று அப்பிரிவு கூறியுள்ளது.
மாறாக, இது தொடர்பாக விசாரணைகளை முடிக்க அதிகாரிகளுக்கு இடம் தருவதாக அது கூறியது.
“கெப்போங் பிகேஆர் தலைமை கலைமுகிலன் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிலைமைக்கு அனுதாபம் தெரிவிக்கிறது. மேலும் அவர் பிரிவுத் தலைவராக இருந்தபோது பிகேஆர் போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு அனைத்திற்கும் எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறோம்.”
“அப்படியிருந்தும், இந்த ஜனநாயக நாட்டில் நடைமுறையில் உள்ளதைப் போல அதிகாரத்தை மதிக்கும் ஓர் அரசியல் கட்சி நாங்கள். காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அவர்களின் விசாரணைகளை முடிக்க போதுமான இடத்தை நாங்கள் வழங்குவோம், ”என்று தற்போதைய பிரிவுத் தலைவர் நாயிம் பிருண்டாஜ் இன்று புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்திற்கு நலன்புரி உதவிகளை இந்த பிரிவு ஏற்பாடு செய்யும் என்றும் நாயிம் உறுதியளித்தார்.
விடுதலைப் புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக 28 வயதான கலைமுகிலன், தண்டனைச் சட்டத்தின் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்பட்டார்.