Home நாடு முஹிடினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பகாங் சுல்தானின் புதல்வரும் வலியுறுத்தினார்

முஹிடினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பகாங் சுல்தானின் புதல்வரும் வலியுறுத்தினார்

227
0
SHARE
Ad
தெங்கு ஹசனால் இப்ராஹிம் ஆலம் ஷா

குவாந்தான்: பகாங்கின் மாநிலத்தின் இளவரசரும் (தெங்கு மக்கோத்தா) பகாங் சுல்தானின் புதல்வருமான தெங்கு ஹசனால் இப்ராஹிம் ஆலம் ஷா, முஹிடின் யாசின் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையை வலியுறுத்தியுள்ளார்.

தனது தந்தையாரும், முன்னாள் மன்னருமான, அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா, நாட்டின் யாங் டி-பெர்துவான் அகோங் பொறுப்பில் இருந்தபோது அவரின் பங்கை வேண்டுமென்றே திரித்துக் கூறியிருக்கும் முஹிடின் யாசின் மீது தனது கோபம் மற்றும் அதிருப்தியை பகாங் இளவரசர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் தொடர்பில் தெங்கு மக்கோத்தா தெங்கு ஹசனால் அவர்களின் தனிச் செயலாளர் அமிர் சாஃபிக் ஹம்சா காவல் துறையில் புகார் ஒன்றையும் செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நாட்டின் 10-வது பிரதமரைத் தேர்ந்தெடுத்தபோது மன்னர் நீதியாக செயல்படவில்லை என்ற எதிர்மறையான கருத்தை முஹிடினின் பேச்சு மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. அவரது அறிக்கை முதிர்ச்சியின்மையையும் காட்டுகிறது, அவர் பிரதமராக நியமிக்கப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர் போல அவர் பேசியிருக்கிறார்” என்று தெங்கு மக்கோத்தா கூறினார்.

“அரசியலமைப்பு முழு அதிகாரத்தை வழங்கியிருந்தாலும், அல்-சுல்தான் அப்துல்லா பிரதமரை நியமிப்பதில் அவசரமான முடிவை எடுக்கவில்லை. அப்போதைய மன்னர் அரசியலமைப்பு வல்லுநர்களை அழைத்து, பிரதமர் நியமனம் செய்யப்படுவதற்கு முன் ஆட்சியாளர்கள் மாநாட்டின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்,” என அறிக்கை ஒன்றில் தெங்கு ஹசனால் குறிப்பிட்டார்.

டிசம்பர் 19, 2022 அன்று நாடாளுமன்றம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது, இது தெளிவாக அன்வாரே பிரதமராகக் கூடிய பெரும்பான்மையைக் கொண்டிருந்தார் என்ற அல்-சுல்தான் அப்துல்லா கருதிய பரிசீலனையுடன் ஒத்திருந்தது என்று தெங்கு ஹசனால் கூறினார்.

அதன்படி, இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3R) குறித்து வேண்டுமென்றே தொட்டுப் பேசியுள்ள முஹிடின் மீது காவல்துறை சமரசமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெங்கு ஹசனால் தெரிவித்தார்.

இதற்கிடையில் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) அன்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் தனது வாக்குமூலத்தை அளிக்க அழைக்கப்படுவார் என்று காவல்துறை தெரிவித்தது.

நெங்கிரி இடைத்தேர்தலுக்காக சமீபத்தில் பிரச்சாரம் செய்தபோது முஹிடின் யாசின் 3R விவகாரங்களைத் தொட்டார் என்று குற்றம்சாட்டி மொத்தம் 28 காவல்துறை புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையால் விசாரணை நடத்தப்படும் என்று பகாங் காவல்துறை தலைவர் கமிஷனர் டத்தோஸ்ரீ யஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.