கோலாலம்பூர்: இவ்வாண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வரையிலும் மொத்தம் 10.826 பில்லியன் ரிங்கிட் கோரப்படாத பணம் பல்வேறு நிறுவனங்களால் தேசிய கணக்காளர் துறைக்கு (ஜேஏஎன்எம்) வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில், 2.085 பில்லியன் ரிங்கிட் திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டதாகவும், வருவாய் பரிமாற்றத்தில் 1.8 பில்லியன் ரிங்கிட் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் துணை நிதியமைச்சர் டத்தோ அமிருடின் ஹம்சா தெரிவித்தார். 15 ஆண்டுகளில் உரிமை கோரப்படாததால், அவை அவ்வாறு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனால், தற்போதைய கோரப்படாதத் தொகையானது 6.932 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது என்று அவர் நேற்று புதன்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.
மலேசியர்களின் வசதிக்காக தேசிய கணக்காளர் துறை ஓர் இணைய மறுஆய்வு முறையை நிறுவியுள்ளது. இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அணுகப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“ஜேஏஎன்எம் மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் இணையத்தின் வழி தங்களின் கோரப்படாதத் தொகையை அணுகலாம். தரவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் அதனை சோதனை செய்து வருகிறோம்.”
“இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மலேசியர்களுக்கு அணுகுவதற்கும் இது திறக்கப்படும்.” என்று அவர் தெரிவித்தார்.