புதுடில்லி – இன்று இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில் அயோத்தியா பாபர் மசூதி வழக்கு தொடர்பில் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கவிருப்பதால், இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்லா நகர்களிலும் உச்சகட்டப் பாதுகாப்புகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பொதுவாக அனைத்து அரசியல் கட்சிகளும் அறைகூவல் விடுத்துள்ளன.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் எதிர்வரும் நவம்பர் 17-ஆம் தேதியோடு பதவி விலகிச் செல்லவிருப்பதால், அவர் தலைமையில் வழங்கப்படவிருக்கும் இறுதித் தீர்ப்புகளில் ஒன்றாக இன்றைய தீர்ப்பு அமைகிறது.
அயோத்தியா சர்ச்சைப் பகுதி அமைந்துள்ள உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலத்தின் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்குச் சென்று அங்கிருந்து நடப்புகளை நிமிடத்துக்கு நிமிடம் கண்காணித்து வருகிறார் என ஊடகங்கள் தெரிவித்தன.
அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்தில் உயர்நிலைப் பாதுகாப்புக் கூட்டம் ஒன்று நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.