பெட்டாலிங் ஜெயா – இங்குள்ள டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற வடிவமைப்பு மீதான கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கணினி நிபுணர் முத்து நெடுமாறன் மலேசியாவிலும், உலக அளவிலும், தமிழ் மொழி கட்டம் கட்டமாக கணினியில் அரங்கேறிய விதத்தையும், தற்போது திறன்பேசிகள் வரை எழுத்துருகளாக வளர்ச்சி பெற்ற விதம் குறித்தும் சுவாரசியமான உரையொன்றை நிகழ்த்தினார்.
டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தின் வடிவமைப்புத் துறை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி ‘டிரபிள் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது.
முதன் முதலாக தமிழ்ப் பத்திரிகைகள் இரும்பிலான எழுத்துருகளைக் கொண்டு எழுத்துக் கோர்வை செய்யப்பட்டு, அச்சடிக்கப்பட்ட விதம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட முத்து நெடுமாறன், முதன் முதலாக தமிழ் ஓசை நாளிதழ் மூலம் கணினியில் எழுத்துக் கோர்ப்பு செய்து அச்சடிக்கப்பட தான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறித்தும் அதற்கு அப்போதைய தமிழ் ஓசை நிர்வாகம் வழங்கிய ஆதரவு குறித்தும் எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் தமிழுக்கென தனியாக ‘முரசு அஞ்சல்’ என்ற மென்பொருளை உருவாக்கிய விதம் குறித்தும், அந்த மென்பொருள் தற்போது இணையம் வழி இலவசமாக வழங்கப்படுகிறது என்பதையும் விவரித்தார்.
அதன் பின்னர் அடுத்த கட்ட வளர்ச்சியாக, மின்னஞ்சல் போன்ற பரிமாற்றங்களில் தமிழ் மொழி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது குறித்தும், அண்மைய ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியில் அசுர முன்னேற்றம் கண்டிருக்கும் திறன்பேசிகள் (ஸ்மார்ட் போன்) உள்ளீட்டில் தமிழ் எழுத்துருகள் இடம் பெறத் தான் எடுத்த முயற்சிகள், செயல்படுத்திய விதம் குறித்தும் எடுத்துரைத்தார்.
பெரும்பாலும் இந்தியர் அல்லாத இளைஞர்களும், யுவதிகளுமாகத் திரண்டிருந்த பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் முத்து நெடுமாறனின் உரைக்கு அடிக்கடி கரவொலி எழுப்பி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வரவேற்றனர்.
பின்னர் அனைத்து உரையாளர்களும் கலந்து கொள்ள பங்கேற்பாளர்கள் முன் வைத்த பல கேள்விகளுக்கு முத்து நெடுமாறன் உள்ளிட்ட உரையாளர்கள் பதிலளித்தனர்.
வடிவமைப்புத் துறை சார்ந்த நிபுணர்களும், அனுபவசாலிகளும் உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் சிறப்புரையாற்றினார்.
டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரான அவர், கிராபிக் டிசைன் எனப்படும் துறையில் தான் பெற்ற அனுபவங்களையும், அன்வார் இப்ராகிம் தலைமைத்துவத்தினால் ஈர்க்கப்பட்டு, பிகேஆர் கட்சியின் சீர்திருத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு இன்று நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்திருப்பது வரையிலான அரசியல் அனுபவங்களையும் தனதுரையில் பகிர்ந்து கொண்டார்.
நாடாளுமன்றக் கட்டிடத்தின் வடிவமைப்பு சிறப்புகள் குறித்து, தான் அறிந்த விவரங்களையும் சுவாரசியத்துடன் பாமி பாட்சில் விளக்கினார்.