கோலாலம்பூர்: வேக தடுப்பு இல்லாத மிதிவண்டிகளை சாலைகளில் பயன்படுத்தியக் காரணத்திற்காக, ஆறு பெற்றோர்களை அம்பாங் காவல் துறையினர் நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை தடுத்து வைத்துள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் நூர் அஸ்மி யூசோப் தெரிவித்தார்.
37 முதல் 52 வயதுடைய அறுவரும் பாதுகாப்புக் காவலர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தங்கும் விடுதி மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.
“குழந்தைகள் சட்டம் 2001-இன் பிரிவு கீழ் குழந்தைகளை அலட்சியமாக மேற்பார்வையிட்டதற்காக அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 5,000 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டு வருடங்களுக்கு மிகாமல் அல்லது இரண்டிற்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்” என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டவுடன் அவர்கள் அனைவரும் காவல் துறையினரின் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, நேற்று இரவு 8.51 மணியளவில் சாலையில் வேக தடுப்பு இல்லாத மிதிவண்டியைச் செலுத்தியதற்காக 11 முதல் 16 வயதுடைய ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.