சென்னை: கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் சுபஸ்ரீ, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, சாலையின் நடுவே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பதாகை அவர் மீது விழுந்தது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவரை மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. மேலும், இனி இவ்வாறான பதாகைகள் அனாவசியமாக அங்கும் இங்குமாய் வைக்கப்படக் கூடாது என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தற்போது கோவையில் அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற அனுராதா ராஜேஸ்வரி எனும் இளம்பெண் நிலை தடுமாறி விழுந்து, பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.
இவர் வழக்கம்போல் நேற்று திங்கட்கிழமை , தனது அலுவலகத்திற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் விமான நிலைய சந்திப்பில் இருந்து நீலாம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பம், தம்மீது விழாமல் இருக்க, அனுராதா வேகத்தைக் கட்டுப்படுத்தியதாகவும், அந்நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று, கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க. அவிநாசி நெடுஞ்சாலை, முழுவதும் அதிமுக கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் கூறினர்.