Home One Line P1 அரசியல் பார்வை : தஞ்சோங் பியாய் – மகாதீர் தலைமைத்துவத்திற்கு எதிரான கடும் அதிருப்தியின் வெளிப்பாடு

அரசியல் பார்வை : தஞ்சோங் பியாய் – மகாதீர் தலைமைத்துவத்திற்கு எதிரான கடும் அதிருப்தியின் வெளிப்பாடு

1241
0
SHARE
Ad

(தஞ்சோங் பியாய் தோல்விக்கு முக்கியக் காரணம் மகாதீரின் தலைமைத்துவம் மீதான அதிருப்திதான் என்றும் நம்பிக்கைக் கூட்டணி இந்தத் தோல்வியிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி அவர் அன்வாருக்குப் பதவியை விட்டுக் கொடுப்பதுதான் எனவும் தனது அரசியல் பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

தஞ்சோங் பியாய் அதிர்ச்சித் தோல்வியிலிருந்து மீள நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களுக்கு நெடுங்காலம் பிடிக்கும்.

நேற்றிரவு பல அரசியல் தலைவர்களுக்கு தூக்கம் வந்திருக்காது. தேசிய முன்னணியில் உள்ளவர்களுக்கு உற்சாக மிகுதியால்!

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி சார்ந்தவர்களுக்கோ அதிர்ச்சித் தோல்வியின் காரணத்தால்!

தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தேர்தலில் 2004-ஆம் ஆண்டு மசீச சார்பில் அதன் அப்போதைய தேசியத் தலைவர் ஓங் கா திங் போட்டியிட்ட போது 23,615 வாக்குகள் பெரும்பான்மையில் மசீச-தேசிய முன்னணி பெற்ற வெற்றிதான் இதுவரையில் அந்தத் தொகுதியில் தேசிய முன்னணி பெற்ற உச்சபட்ச வெற்றி.

அதனை அடுத்து 2008 பொதுத் தேர்தலில் 12,371 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற தேசிய முன்னணியின் வீ ஜெக் செங் அடுத்து வந்த 2013 தேர்தலில் அப்போதைய பக்காத்தான் ராயாட் கூட்டணியின் அலை வீசியபோதும் 5,457 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

2013-இல் நாடெங்கும் வீசிய பக்காத்தான் ராயாட் கூட்டணியின் வெற்றி அலை ஜோகூர் மாநிலத்தில் மட்டும் பெரிதாக எந்தவிதத் தாக்கங்களையும் ஏற்படுத்தவில்லை.

2018-இல் பக்காத்தான் ஹரப்பான் என உருமாற்றம் கண்ட – துன் மகாதீர் தலைமையிலான கூட்டணி ஜோகூரில் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தாக்கத்தால் தஞ்சோங் பியாய் தொகுதியில் இரண்டு முறை வென்ற வீ ஜெக் செங் மூன்றாவது முறை போட்டியிட்டபோது 524 வாக்குகளில் தோல்வியைத் தழுவினார்.

நேற்று சனிக்கிழமை நடந்த இடைத் தேர்தலில் 15,086 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றதன் வழி 2004-க்குப் பிறகு மிகப் பெரிய வெற்றியை வீ ஜெக் செங் பதிவு செய்திருக்கிறார்.

தேசிய முன்னணியின் வெற்றி கணிக்கப்பட்டாலும், 2013 தேர்தலில் பெற்ற வெற்றியைப் போன்று அதிகபட்சமாக 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அது வெற்றி பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், வாக்காளர்களோ, அதைவிட மும்மடங்கு பெரும்பான்மையை வாரி வழங்கியிருக்கின்றனர்.

இது தேசிய முன்னணி ஆதரவுக்கான வெற்றி என்பதை விட, நம்பிக்கைக் கூட்டணி மீது வாக்காளர்கள் தங்களின் அதிருப்தியை – வெறுப்பை – எதிர்ப்பை – வெளிக்காட்டியதன் விளைவு என்றே கொள்ளலாம்.

சரி! இந்த வெற்றி நமக்கு சொல்கின்ற சேதி என்ன?

மகாதீர் தலைமைத்துவத்தின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடு

இந்த வெற்றிக்கான முதல் காரணம் அம்னோ-பாஸ் இணைந்து இயங்கியது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வெண்டும்.

ஆனால், மலாய் வாக்குகள் மட்டும் இத்தனை பெரிய வெற்றியை பெற்றுத் தந்திருக்க முடியாது.

அண்மையக் காலத்தில் மகாதீரின் பேச்சும் செயலும் குறிப்பாக மலாய்க்காரர் அல்லாத மக்களிடத்தில் நம்பிக்கைக் கூட்டணி மீதான நம்பிக்கையை முற்றிலும் சிதைத்து விட்டது எனலாம்.

அதற்குப் பின்வரும் காரணங்களை வரிசையாக அடுக்கலாம் :

  • மலாய் தன்மானக் காங்கிரஸ் மாநாட்டில் மகாதீர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தது.
  • அந்த மாநாட்டில் தமிழ், சீனப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற பரிந்துரை அடங்கிய தீர்மானங்களை கைநீட்டி வாங்கிக் கொண்டது.
  • புதிய மலேசியா தோற்றத்தை 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேசியவர் அண்மையக் காலங்களில் மீண்டும் பழைய பாணியிலேயே மலாய் தன்மானத்தையும், உரிமைகளையும் பேசி வருவது.
  • ஒப்புக் கொண்டபடி, அன்வார் இப்ராகிமுக்குத் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுப்பதைப் பற்றி உறுதிபட தெரிவிப்பதைத் தவிர்ப்பது – அதனால் நம்பிக்கைக் கூட்டணியிலும், பிகேஆர் கட்சியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
  • 20 ஆண்டுகளுக்கு முன்னால் அன்வார் இப்ராகிம் மீதான ஓரினச் சேர்க்கை வழக்கை, விரைவாக நடத்தி அன்வாரை சிறைக்கு அனுப்புவதில் காட்டிய வேகத்தை, அஸ்மின் அலி விவகாரத்தில் காட்டாதது – அந்த குற்றச்சாட்டுகளை காவல்துறையின் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருப்பது!
  • அஸ்மின் அலி, அன்வாருக்கு எதிராகக் கருத்துகள் தெரிவித்த போதும், அதனைக் கண்டிக்காமல் – கண்டு கொள்ளாமல் – அஸ்மினுக்கு அமைச்சரவையில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருவது – அதன்வழி பிகேஆர் கட்சியில் குழப்பங்களை ஏற்படுத்த முனைவது!
  • ஜாகிர் நாயக் விவகாரத்தில் மகாதீர் எடுத்து வரும் நடவடிக்கைகள் – சீனர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பைத் தேடித் தந்திருப்பது.
  • நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படாமல் இருப்பது – காலம் தாழ்த்துவது.
  •  ஆட்சிக்கு வந்தால் சொஸ்மா சட்டத்தை அகற்றுவோம் என முழங்கிவிட்டு, விடுதலைப் புலிகள் விவகாரத்தில், அதே சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி கைது நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இப்படியாக தோல்விக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேற்கூறப்பட்ட காரணங்களைத் தனித் தனியாக விளக்கவேண்டியதில்லை.

ஏற்கனவே, பொதுவில் பகிரங்கமாகவும் – விரிவாகவும் விவாதிக்கப்படும் காரணங்கள்தான் அவை.

தஞ்சோங் பியாய் தேர்தல் முடிவை வைத்துப் பார்க்கும்போது இப்போதைக்கு தனது வீழ்ச்சியிலிருந்து மீண்டு எழ அந்தக் கூட்டணிக்கு ஒரே வழிதான் இருக்கிறது.

உடனடியாக மகாதீர் தான் பதவி விலகப்போகும் தேதியை ஒப்புக் கொண்டபடி இரண்டு வருடங்களுக்குள் – 2020 மே மாதத்திற்குள் – நிர்ணயித்து விட்டு – அன்வாருக்கு அந்தப் பொறுப்பை விட்டுக் கொடுப்பதுதான் அந்த வழி!

அப்போதுதான் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட நம்பிக்கைக் கூட்டணியின் தோற்றத்தை அடுத்த மூன்றாண்டுகளுக்குள் ஓரளவுக்காவது சீர் செய்யக் கூடிய – புதிய மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய – அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களை அமுலுக்குக் கொண்டுவரக் கூடிய –  வாய்ப்பு அன்வாருக்கும், நம்பிக்கைக் கூட்டணியின் மற்ற தலைவர்களுக்கும் கிடைக்கும்.

இல்லாவிட்டால், 15-வது பொதுத் தேர்தலிலோ, அல்லது அதற்கும் முன்கூட்டியோ, நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை இழந்து – அந்தக் கூட்டணி நமக்கு உறுதியளித்த புதிய மலேசியா கனவுகள் கானல் நீராக – காண முடியாத ஒன்றாக – காற்றில் கரைந்து விடும்.

அம்னோ – பாஸ் இணைந்த ஆதிக்க ஆட்சியில் – மலாய், முஸ்லீம் பெரும்பான்மை ஆட்சியில் – மலேசியா மீண்டும் சிக்கிக் கொள்ளும்!

-இரா.முத்தரசன்