கோலா முடா காவல்துறை தலைமை உதவித் தலைவர் அட்சிலி அபு ஷா கூறுகையில், கட்டிடத்திலிருந்து ஏதோ ஒன்று விழுந்தது போல சத்தம் கேட்டதைத் தொடர்ந்து மற்றொரு மாணவர் இதனை கண்டதாகத் தெரிவித்தார்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அம்மாணவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
அட்சிலியின் கூற்றுப்படி, முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவர் ஒரு நல்ல மாணவர் என்றும், கட்டணம் அல்லது வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாதவர் என்றும் கண்டறியப்பட்டதாகக் கூறினார்.
மேலும், அன்றையத் தினம் அம்மாணவரின் தந்தை மதியம் 2.30 மணியளவில் தனது மகனை தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. உடைகள் மற்றும் சங்கிலியை அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் நேற்று அம்மாணவரை சந்திக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று திங்கட்கிழமை நடக்க இருந்த தேர்வின் அழுத்தத்தில் மாணவர் இருந்தாரா, இல்லையா என்பது குறித்து மேலதிக விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார்.
தற்போதைக்கு, இந்த வழக்கு திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.