கோலாலம்பூர்: தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நலன்களில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும் என்று பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டார். நம்பிக்கைக் கூட்டணியின் உட்கட்சி விவகரங்களில் தலையிடுவது சரியானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய முன்னணியின் ஆலோசனைக் குழுத் தலைவருமான நஜிப் கூறுகையில், நம்பிக்கைக் கூட்டணி உட்கட்சி விவகாரங்களைக் காட்டிலும் மக்களின் நலன் முக்கியம் என்று தெரிவித்தார்.
மக்கள் நலன்களில் கவனம் செலுத்திதன் காரணத்தினால்தான் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு பெரும் வெற்றி கிடைத்தது என்றும் நஜிப் விளக்கினார்.
“மக்களின் நலன்களில் எதிர்க்கட்சியாக நமது பங்கில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் மிக முக்கியமான விஷயம். நம் கவனம் காரணமாக, நமக்கு தஞ்சோங் பியாயில் ஆதரவு கிடைத்தது.”
இன்று செவ்வாயன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்பிக்கைக் கூட்டணி தனது சொந்த தலைமைத்துவ பிரச்சனையை அதுவாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தாம் நினைப்பதாகக் கூறினார்.
முன்னதாக, குறைந்தது 22 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புத்ராஜெயாவில் உள்ள பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.