Home One Line P2 சவுதி அராம்கோ பொதுப் பங்கு விற்பனை : பெட்ரோனாஸ் பங்குகள் வாங்கப் போவதில்லை.

சவுதி அராம்கோ பொதுப் பங்கு விற்பனை : பெட்ரோனாஸ் பங்குகள் வாங்கப் போவதில்லை.

875
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலகின் மிகப் பெரிய பொதுப் பங்கு விநியோகமாக உருவெடுத்திருக்கும் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனப் பங்குகள் விற்பனையில், பங்குகள் எதனையும் வாங்கப் போவதில்லை என பெட்ரோனாஸ் அறிவித்துள்ளது.

தனது பங்குகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிட முனைந்திருக்கும் – சவுதி அரேபியாவின் ஏகபோக எண்ணெய் உரிமங்களைக் கொண்ட அராம்கோ நிறுவனத்தின் – மதிப்பு 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

200 பில்லியன் பங்குகளைக் கொண்டிருக்கும் அராம்கோ அதில் 1.5 விழுக்காட்டு பங்குகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க முன்வந்துள்ளது. இதில் 0.5 விழுக்காட்டுப் பங்குகள் தனிநபர்களுக்கும் ஒரு விழுக்காட்டுப் பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்யப்படும்.

#TamilSchoolmychoice

ஒரு பங்கின் விலை 30 ரியால் (8 அமெரிக்க டாலர்) முதல் 32 ரியால் வரை (அமெரிக்க டாலர் 8.53) விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பங்கு விற்பனையில் அனைத்துலக எண்ணெய் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பங்குகளை வாங்கும் எனக் கருதப்பட்ட வேளையில் மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனம் விடுத்த அறிக்கை ஒன்றில், அராம்கோ தனது பங்குகளை வாங்கத் தங்களை அணுகியதாகவும், ஆனால் ஆழ்ந்த பரிசீலனைக்குப் பின்னர் அராம்கோ பங்குகளை வாங்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தது.

அராம்கோவுடன் ஏற்கனவே வணிக கூட்டுத் திட்டத்தை பெட்ரோனாஸ் மேற்கொண்டிருக்கிறது. ஜோகூர் மாநிலத்தில் உள்ள 27 பில்லியன் டாலர் மதிப்புடைய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய இராசயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் மாபெரும் கூட்டுத் திட்டத்தை அராம்கோவும், பெட்ரோனாசும் இணைந்து மேற்கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டிற்குள் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுப் பங்கு விநியோகத்தின் மூலம் சுமார் 25 பில்லியனுக்கும் மேற்பட்ட முதலீட்டு நிதியை ஈர்த்து அந்தத் தொகையைக் கொண்டு எண்ணெய் அல்லாத தொழில்களில் முதலீடு செய்து, கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மாற்று வருமானங்களைக் கொண்ட நிறுவனமாக உருமாற்றவும் சவுதியின் ஆட்சியாளர் இளவரசர் முகமட் பின் சல்மான் முனைந்துள்ளார்.

அராம்கோ இதுவரையில் 19.47 பில்லியன் டாலர் மதிப்புடைய பங்குகள் விற்பனை செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.