மலாக்கா: இன்று வெள்ளிக்கிழமை மலாக்காவில் நடைபெற்று கொண்டிருக்கும் பிகேஆர் இளைஞர் தேசிய காங்கிரஸ் (ஏஎம்கே) கூட்டத்தின் போது, கட்சி பிரதிநிதிகளுக்கும், பார்வையாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, கறுப்பு ஆடை அணிந்து வந்திருந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கூட்டம் கலக்கமடைந்தது.
காலை 8 மணியளவில் மண்டபத்தின் நுழைவாயிலுக்கு முன்னால் பதட்டமான சூழ்நிலை எழுந்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது. காங்கிரஸின் நிரந்தர முன்னாள் தலைவர் அட்லி முகமட் நூர் உள்ளிட்ட இளைஞர்கள் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படாதது மேலும் நிலைமையை மோசமடையச் செய்தது.
மதியம் மீண்டும் எம்ஐடிசி கட்டிடத்திற்குள் ஒரு சண்டை வெடித்தது. அச்சண்டையில் பிகேஆர் உறுப்பினர் ஒருவரின் மூக்கில் இரத்தப்போக்கு காணப்பட்டது. சிலர் அவர் தாக்கப்பட்டதாகக் கூறியதாகவும், மேலும் சிலர் இது கல் வீச்சால் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மலேசியாகினியால் பேட்டி காணப்பட்ட கறுப்பு ஆடை அணிந்து வந்திருந்த இளைஞர்கள், அவர்கள் எதற்காக அங்கு கொண்டுவரப்பட்டனர் என்ற கருத்தே இல்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் தாங்கள் பேருந்தில் கொண்டு வரப்பட்டதாகவும், இது ஒரு ‘சீர்திருத்தப் போராட்டம்’ என்று கூறி அழைத்து வரப்பட்டதாகவும் கூறினார். மூன்று நாள் மாநாடு முடிந்ததும் அவருக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் டேனியல் இஸ்காண்டார் எனும் அந்த நபர் தெரிவித்தார்.