துபாய் – பொதுப் பங்கு விற்பனையின் மூலம் 25.6 பில்லியன் டாலர்களை முதலீட்டாகத் திரட்டிய சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்குகள் இன்று புதன்கிழமை சவுதி அரேபியா பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, அதன் விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன.
இன்று காலை 10.30 மணிக்கு பங்குச் சந்தை வணிகத்திற்கு திறக்கப்பட்டபோது 10 விழுக்காடு உயர்ந்து ஒரு பங்கு 35.20 ரியால்ஸ் என்ற அளவுக்குப் பரிமாற்றம் கண்டது. பொதுமக்களுக்கு 32 ரியால்ஸ் விலையில் இந்தப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
இதன் மூலம் அராம்கோவின் மதிப்பு 1.88 டிரில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டு, அதன் காரணமாக உலகிலேயே மிகப் பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றாக சவுதி அரேபியா பங்குச் சந்தை உருவெடுத்துள்ளது.
பங்குகள் விற்பனையின்போது 1.7 டிரில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்ட அராம்கோ நிறுவனம், தற்போது பங்குச் சந்தையில் 1.88 டிரில்லியன் டாலர்கள் மதிப்பைக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை நிறுவனங்களாகக் கருதப்படும் மைக்ரோசோப்ட் மற்றும் ஆப்பிள் இன்கொர்ப்பரேட்டட் என்ற இரண்டு நிறுவனங்களை விட அராம்கோ அதிக மதிப்புடைய நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது.
உலகின் மிகப் பெரிய பொதுப் பங்குகள் விற்பனையைக் கொண்ட நிறுவனமாக அராம்கோ சாதனை புரிந்துள்ளது.