Home One Line P2 டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றம், பதவி பறிபோகுமா?

டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றம், பதவி பறிபோகுமா?

885
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள நிலையில், நடப்பு அதிபர் டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சிச் சார்பில், அத்தேர்தலில் மீண்டும் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளது குறிப்பிடத்தகது.

இதனிடையே, அந்நாட்டு  நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, அவருக்கு எதிராக விசாரணைகளைத் தொடக்கிய ஜனநாயக நாடாளுமன்ற விசாரணைக் குழு அவருக்கு எதிராக இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதலாவது தீர்மானம் டிரம்ப் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் எனக் குற்றம் சுமத்தியது. இரண்டாவது தீர்மானம் காங்கிரஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நடைமுறைகளில் தடைகளை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது.

#TamilSchoolmychoice

முன்னாள் அமெரிக்கத் துணையதிபரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான ஜோ பிடனுக்கு எதிராக உக்ரேன் அரசாங்கம் புலனாய்வுகளைத் தொடக்க டிரம்ப் நெருக்குதல் தந்தார் என்பதாலும், உக்ரேன் அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால், உக்ரேன், வெள்ளை மாளிகையுடனான சந்திப்புகளை நடத்த முடியாது என்றும், அதற்கு இராணுவ உதவிகளை வழங்க முடியாது என்றும் டிரம்ப் நிபந்தனைகள் விதித்தார் என்பதாலும், அவர் அதிகார விதிமீறல்களைச் செய்தார் என முதல் தீர்மானம் விவரிக்கின்றது.

முல்லர் என்பவரின் அறிக்கையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த உண்மைகள் வெளிவந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்ற நீதி விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. அந்த விசாரணைக்கு இடையூறுகள் செய்தது, சாட்சிகள் அரசாங்க இலாகாக்களுடனான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கக் கூடாது என நெருக்குதல்கள் தந்தது, சாட்சியம் அளிக்க அழைப்புகள் அனுப்பப்பட்ட சாட்சிகளிடம் அந்த அழைப்புகளைப் புறக்கணியுங்கள் என நெருக்கடிகள் தந்தது என பல முனைகளிலும் நாடாளுமன்ற விசாரணைக்கு டிரம்ப் இடையூறுகள் ஏற்படுத்தினார் என்ற காரணத்தினால் இரண்டாவது தீர்மானம் வரையப்பட்டது.

இந்நிலையில் இந்த புகார்களின் அடிப்படையில் டிரம்ப் மீதான கண்டன தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த நீதி விசாரணைக் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து டிரம்ப்பை பதவி நீக்குவதற்கான கண்டன தீர்மானம் முதல்கட்டமாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில், 229 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தனர். இதனை அடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் நிறைவேறியது.

இதற்கு பிறகு, 100 உறுப்பினர்களை கொண்ட செனட் மன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே, டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

இதுவரை அமெரிக்க அதிபர்களுக்கு எதிராக மூன்று கண்டன தீர்மான நடைமுறைகளை அமெரிக்க நாடாளுமன்றம் கண்டுள்ளது. முதலாவது 1868-இல் அதிபர் அண்ட்ரூ ஜோன்சனுக்கு எதிராக நடைபெற்றது. அதில் செனட் மன்றத்தில் ஒரே வாக்கு வித்தியாசத்தில் நம்பகத்தன்மை குறித்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன.

அடுத்து இரண்டாவதாக 1974-இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது இதே போன்ற கண்டன தீர்மானங்கள். அந்தத் தீர்மானங்கள் வாக்கெடுப்பு விடப்படும் முன்னரே நிக்சன் தனது பதவியிலிருந்து விலகினார்.

மூன்றாவதாக, 1998-இல் மோனிகா லிவின்ஸ்கியுடனான பாலியல் தொடர்பு காரணமாக அப்போதைய அதிபர் பில் கிளிண்டனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள். இதில் செனட் மன்றத்தில் விடப்பட்ட வாக்கெடுப்பில் கிளிண்டன் அதிபராகத் தொடரலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.