Home One Line P2 மலேசியாவில் நெட்பிலிக்ஸ் கட்டணங்கள் உயர்கின்றன – மின்னிலக்க வரிவிதிப்பும் உண்டு

மலேசியாவில் நெட்பிலிக்ஸ் கட்டணங்கள் உயர்கின்றன – மின்னிலக்க வரிவிதிப்பும் உண்டு

794
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கி வரும் நெட்பிலிக்ஸ் சேவைகளுக்கான கட்டண விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வருகின்றது.

இணையம் வழி, திரைப்படங்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்கி வரும் நெட்பிலிக்சின்அடிப்படைக் கட்டணம் (Basic plan) 33 ரிங்கிட்டிலிருந்து 35 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது. ஸ்டாண்டர்ட் (Standard) என்ற பிரிவுக்கான கட்டணம் 42 ரிங்கிட்டிலிருந்து 45 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது. பிரிமியம் (Premium) எனப்படும் முதல் தர சேவைகளுக்கான கட்டணம் 51 ரிங்கிட்டிலிருந்து 55 ரிங்கிட்டாக உயர்வு காண்கிறது.

#TamilSchoolmychoice

மொபைல் எனப்படும் கையடக்கக் கருவிகளின் வழி மட்டும் பெறும் சேவைகள் மாதம் ஒன்றுக்கு 17 ரிங்கிட்டாக இருந்து வரும்.

இந்தியாவில் போட்டிகளை சமாளிக்க கட்டணங்களைக் குறைத்துள்ள நெட்பிலிக்ஸ் மலேசியாவில் கட்டண உயர்வை அமுல்படுத்துகிறது.

இந்தப் புதிய கட்டணங்களில் 6 விழுக்காடு மின்னிலக்க வரிவிதிப்பும் (டிஜிட்டல்) சேர்த்துக் கொள்ளப்படும் என நெட்பிலிக்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 2020-ஆம் ஆண்டுக்கான மலேசிய வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டிலிருந்து சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு 6 விழுக்காடு மின்னிலக்க வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்திருந்தார். 500,000 ரிங்கிட்டுக்குக் கூடுதலாக வருமானம் பெறும் இத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்த வரிவிதிப்பைச் செலுத்த வேண்டும்.

2016-இல் நெட்பிலிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இப்போதுதான் முதன் முறையாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதே போன்ற கட்டண மாற்றங்கள் சிங்கப்பூரிலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.

அண்மையில் நெட்பிலிக்ஸ் சொந்தமாகத் தயாரித்து வெளியிட்ட ‘தி ஐரிஷ்மேன்’ திரைப்படத்தை உலகம் எங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் என்பதோடு, அனைத்துலக அரங்கில் பல விருதுகளையும் அந்தத் திரைப்படம் பெற்று வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.