கோலாலம்பூர்: அண்மையில் பெர்லிஸ் பல்கலைக்கழகத் (யுனிமாப்) தேர்வுத் தாளில் ஜாகிர் நாயக் குறித்த உள்ளடக்கங்களுக்கு கல்வி அமைச்சு பொறுப்பல்ல என்று தெரிவித்ததற்கு சமூக ஊடகங்களில் மக்கள் சாடியுள்ளனர்.
“ஒவ்வொரு பொது பல்கலைக்கழகத்திற்கும் முடிவு செய்யக்கூடிய உரிமை உள்ளது மற்றும் அதன் கல்வித் தரங்களுக்கு அதுவே பொறுப்பாகும்” என்று கல்வி அமைச்சு அண்மையில் ஓர் அறிக்கையின் மூலமாகக் குறிப்பிட்டிருந்தது.
பல்கலைக்கழகங்களின் கல்வித் திட்டங்களில் கல்வி அமைச்சு தலையிடாது என்றும் அது தெரிவித்திருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் தங்களின் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
“பல்கலைக்கழகங்கள் கல்வி அமைச்சின் கீழ் வருகின்றன. அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் பல்கலைக்கழகங்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டிய கடமை உள்ளது. இத்தகைய பிரச்சனைகள் எழும்போது, ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசியலமைப்பைக் கடைப்பிடிப்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்.” என்று பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளதாக மலேசியாகினி யோர்சே அங்கம் குறிப்பிட்டுள்ளது.
“இது போன்ற பிரச்சனை ஏற்படும் போது அமைச்சகம் கை கழுவ முடியாது. அப்படியானால், மக்களின் பணத்தை வீணடிப்பதற்கு சமமாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது கல்வி அமைச்சின் பொதுவான மற்றும் பொறுப்பற்ற நிலையான பதில். அமைச்சுக்குள் ஏன் உயர் கல்வித் துறை உள்ளது? அதன் செயல்பாடு என்ன? முந்தைய அரசாங்கத்தின் கீழ், உயர் கல்வி அமைச்சகம் இருந்தது, ஆனால், கல்வி அமைச்சகம் அதன் செயல்பாடுகளை ஏற்க முடியும் என்று நம்பிக்கைக் கூட்டணி அதனை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்தது.”
“எனவே, புதிய உயர்கல்வித் துறையே பெர்லிஸ் பல்கலைக்கழக (யுனிமாப்) தேர்வுத் தாள் சர்ச்சைக்கு பொறுப்பேற்க வேண்டும்.” என்று மேலும், ஒரு நபர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, யுனிமாப் அதன் இன உறவு பகுதிக்கான டிசம்பர் 2019 / ஜனவரி 2020 தேர்வுத் தாளில் சர்ச்சைக்குரிய கேள்வியை வெளியிட்டதைத் தொடர்ந்து அது பலரது கவனத்தை ஈர்த்தது.
இரு மொழித் தேர்வுத் தாளின் 60-வதுகேள்வியில் ஜாகிர் நாயக் குறித்து கேள்வி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதை மஇகா உதவித் தலைவர் ச. சிவராஜ் கேள்விக்குட்படுத்தினார்.
“இன உணர்வுகளை மதிக்காத கேள்விகள், வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களைப் பற்றிய மாணவர்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கில் ஒரு பாடத்திற்கான தேர்வு கேள்வியாக ஏன் தயாரிக்கப்படுகின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”
“இந்த விஷயத்தை சரிபார்த்து விளக்க யுனிமாப் நிர்வாகம் முன்வரும் என்று நான் நம்புகிறேன்” என்று சிவராஜ் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.