டெஹ்ரான் – ஈரானியத் தளபதி காசிம் சொலைமணி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கிலுள்ள அமெரிக்கத் துருப்புகள் தங்கியிருக்கும் தளங்கள் மீது ஈரான் இன்று ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இர்பில் மற்றும் அல் அசாட் என்ற இடங்களில் அமைந்துள்ள விமானப் படைத் தளங்களில் அமெரிக்கத் துருப்புகள் தங்கியிருக்கும் இடங்களை நோக்கி 12 ஈரானிய ஏவுகணைகள் பாய்ந்தன.
இந்தத் தாக்குதலில் அமெரிக்க சுற்றுப் பயணிகள் சுமார் 80 பேர் மரணமடைந்ததாக ஈரான் கூறியது. ஆனால், யாரும் காயமடையவில்லை என அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது.
இன்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் “எல்லாம் நல்லடியாக இருக்கிறது. சேதங்களைத் தற்போது மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை டிரம்ப் தனது அடுத்த நடவடிக்கை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால், உலகம் முழுவதும் டிரம்ப் என்ன சொல்லப் போகிறார், என்ன பதில் நடவடிக்கையை அறிவிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள அனைத்துல வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
கொல்லப்பட்ட காசிம் சொலைமானில் நல்லடக்கம் நடைபெற்று முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் ஈரானின் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து கருத்துரைத்த ஈரானின் இஸ்லாமியத் தலைவர் அயோத்துல்லா காமெனெய் (படம்) “ஈரானின் தாக்குதல் அமெரிக்காவின் முகத்தில் நாங்கள் விட்ட அறை” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும் அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் சொலைமணி கொல்லப்பட்டதற்கான பதில் இந்தப் பிரதேசத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை உதைத்து விரட்டுவதுதான் என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈராக் மற்றும் ஈரானின் வான் பரப்பில் தங்களின் விமான சேவைகளை ஈடுபடுத்தப் போவதில்லை என பல விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.