கோலாலம்பூர்: முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ ஷாரிர் சமாட், டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடமிருந்து பெறப்பட்ட 1 மில்லியன் ரிங்கிட்டை உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் (ஐஆர்பி) அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
71 வயதான ஷாரிர், நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில், தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை மறுத்தார்.
2013 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமான பாரத்தில் உண்மையான வருமானத்தை அறிவிக்காததன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டதாக ஷாரிர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வருமானவரிச்சட்டம் 1967-ஆம் ஆண்டு பிரிவு 113-க்கு இது முரணானது. கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி அம்இஸ்லாமிக் பேங்க் பெர்ஹாட்டின் காசோலை மூலம் நஜிப்பிடமிருந்து 1 மில்லியன் ரிங்கிட்டை அவர் பெற்றார்.
பின்னர், அக்காசோலை அதே ஆண்டில் நவம்பர் 28-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவரின் பப்ளிக் பேங் இஸ்லாமிய வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி தடுப்புச் சட்டம் 2001-இன் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக அபராதம் அல்லது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.