சுங்கை பூலோ – தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள், மற்றும் இந்தியர்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சனைகள் என்று வரும்போது கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பு இந்தியத் தலைவர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும், போராட வேண்டும் என்றும் அதற்கு மஇகாவே முன்னுதாரணமாகத் திகழும் என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறைகூவல் விடுத்தார்.
பண்டார் பாரு சுங்கைபூலோவில் வீற்றிருக்கும் ஸ்ரீ இராஜமாரியம்மன் ஆலயத் திருப்பணிக்கு நிதி திரட்டுவதற்காக நேற்று திங்கட்கிழமை ரஹ்மான் புத்ரா கிளப்பில் நடைபெற்ற விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அதே வேளையில் மஇகா தமிழ்ப் பள்ளிகளுக்கும், தமிழ் மொழிக்கும், ஆலயங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் அரணாக என்றும் திகழ்ந்து வரும்” என்றும் விக்னேஸ்வரன் தனது உரையில் உறுதியளித்தார்.
மற்ற இனத்தினர் அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அவர்கள் இனத்திற்கான பிரச்சனை என்று வரும்போது அனைவரும் ஒன்று திரண்டு ஒற்றுமையாகப் போராடுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய விக்னேஸ்வரன், இந்தியத் தலைவர்களும் அதே போன்று கட்சி பேதங்களைக் கடந்து இந்தியர் விவகாரங்கள் என்று வரும்போது ஒற்றுமையுடனும், ஒருமித்த குரலுடனும் போராட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நேற்றைய நிகழ்ச்சியில் சுங்கைபூலோ ஸ்ரீ இராஜமாரியம்மன் ஆலயத் திருப்பணிக்கு விக்னேஸ்வரன் 75 ஆயிரம் ரிங்கிட் வழங்குவதாக அறிவித்தார். மஇகா சார்பாக 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்றும் தனது சொந்த நன்கொடையாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்குவதாகவும் விக்னேஸ்வரன் அறிவித்தார்.
ஸ்ரீ இராஜமாரியம்மன் ஆலயம் சுமார் 3 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டு வருவதாகவும், இதன் திருப்பணி 90 விழுக்காடு நிறைவடைந்திருப்பதாகவும் இந்த ஆலயத்திற்கு மேலும் 7 இலட்சம் ரிங்கிட் தேவைப்படுவதாகவும் ஆலயத் தலைவர் சண்முகம் இராமச்சந்திரன் நேற்றைய நிகழ்ச்சியில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
நிர்மாணிக்கப்பட்டு முடிந்ததும் சுங்கை பூலோ வட்டாரத்திலேயே மிகப் பெரிய ஆலயமாக ஸ்ரீ இராஜமாரியம்மன் ஆலயம் திகழும்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனும் கலந்து கொண்டார்.
எப்படி இந்தியத் தலைவர்கள் மாற்று கட்சியில் இருந்தாலும் ஒன்றிணைந்து போராடலாம் என்பதற்கு உதாரணமாக ஸ்ரீ இராஜமாரியம்மன் ஆலயத் திருப்பணிகளே திகழ்கின்றன என்று குறிப்பிட்ட விக்னேஸ்வரன் இந்த ஆலய நிர்மாணிப்புக்கு, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் பிகேஆர் கட்சியின் துணையமைச்சர் சிவராசா முயற்சியில் 2 ஏக்கர் நிலமும் 50 ஆயிரம் ரிங்கிட் மானியமும் பெற்றுத் தரப்பட்டிருக்கும் வேளையில் தனது சார்பாக 75 ஆயிரம் வழங்கப்படுவதையும், மற்ற மஇகா கிளைகளும், தலைவர்களும், ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து இந்த ஆலயத்திற்கு நிதி திரட்டி வருவதையும், சிறந்த முன்னுதாரணமாகக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.
நேற்றைய நிதி திரட்டும் நிகழ்ச்சியில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் துணையமைச்சருமான பிகேஆர் கட்சியின் சிவராசாவின் அரசியல் செயலாளர் நவீன் இராசையா உரையாற்றுகையில் ஏற்கனவே சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த ஆலயத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கியிருப்பதாகவும், தற்போது மேலும் ஒரு ஏக்கர் நிலத்தையும், 50 ஆயிரம் ரிங்கிட் மானியத்தையும் வழங்குவதாகவும் அறிவித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற வணிகப் பிரமுகர்களும் ஆலயத் திருப்பணிக்காக கணிசமான நன்கொடைகளையும் வழங்கினர்.