Home One Line P2 உலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்

உலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்

656
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – அமெரிக்காவைப் பொறுத்தவரை விளையாட்டுத் துறை என்று வரும்போது பலர் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தையும் ஈட்டியிருக்கிறார்கள். அத்தகையவர்களில் ஒருவர் கோபே பிரியாண்ட்.

அதிலும், கறுப்பின இளைஞர்கள் அதிகமாக ஆர்வம் காட்டும் விளையாட்டுத் துறை குத்துச் சண்டையும், தடகளப் போட்டிகளும், கூடைப் பந்து போட்டிகளும்தான்.

அந்த வகையில் சிறந்த கூடைப்பந்து விளையாட்டாளராகத் திகழ்ந்து பல்வேறு சிறந்த விளையாட்டாளர் விருதுகளையும் பெற்று பெரும் இரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தவர் கோபே பிரியாண்ட்.

#TamilSchoolmychoice

அவரோடு அவரது 13 வயது மகள் ஜியானாவும் மரணமடைந்திருப்பது சோகத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது.

கோபே பிரியாண்ட் – அவருடன் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த அவரது மகள் ஜியனா

உலகம் எங்கும் இருந்து அனுதாபச் செய்திகள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கிராமி எனப்படும் இசைப் பாடல்களுக்கான விருது வழங்கும் விழாவிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருப்பது, அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தவர் அவர் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது.

தனது 41-வது வயதிலேயே அவர் அகால மரணமடைந்திருக்கிறார். 1978-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் பிறந்த அவரின் தந்தையாரும் கூடைப்பந்து விளையாட்டு வீரர்தான்.

இத்தாலியில் கோபே பிரியாண்டின் தந்தை ஒரு கூடைப் பந்து கிளப்புக்கு விளையாடிய காரணத்தால் 8 ஆண்டுகள் அந்நாட்டில் வசித்த கோபே பிரியாண்ட், அமெரிக்கா திரும்பியதும் பள்ளியில் படித்துக் கொண்டே கூடைப்பந்து விளையாட்டில் தீவிரம் காட்டினார்.

சிறந்த விளையாட்டாளராகத் திகழ்ந்ததோடு, கூடைப்பந்து விளையாட்டின் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தையும் ஈட்டினார் கோபே பிரியாண்ட்.

2008, 2012 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்கக் குழுவில் கோபே பிரியாண்டும் இடம் பெற்றிருந்தார்.

2005-இல் அவர் மீது பாலியல் வல்லுறவுப் புகார் ஒன்றை பெண்மணி ஒருவர் தெரிவிக்க அது ஊடகங்களில் பெரும் சர்ச்சையானது. எனினும் அந்தப் புகார் மீதான வழக்கு நடைபெறாமல் புகார் செய்தவருடன் அவர் சமரச உடன்பாடு கண்டார்.

1,346 கூடைப்பந்து போட்டிகளில் விளையாடிய அவர் 2016-இல் ஓய்வு பெற்றார்.

வேனசா லேய்ன் என்பவரை 2001-ஆம் ஆண்டில் மணந்த பிரியாண்ட் 2011-இல் அவர்கள் இருவரும் விவாகரத்து புரிவதாக அறிவித்தனர். ஆனால் பின்னர் 2013-இல் அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதாக அறிவித்தனர்.

பிரியாண்டுடன் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த அவரது 13 வயது மகள் தவிர மேலும் மூன்று பெண் பிள்ளைகள் அந்தத் தம்பதிகளுக்கு இருக்கின்றனர்.