Home One Line P1 வேதமூர்த்தி தலைமையில் தேசியப் பொங்கல் விழா – பல இன மக்களும் கலந்து கொண்டனர்

வேதமூர்த்தி தலைமையில் தேசியப் பொங்கல் விழா – பல இன மக்களும் கலந்து கொண்டனர்

1052
0
SHARE
Ad

பத்துமலை – இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற தேசியப் பொங்கல் விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் துறையின் ஒற்றுமைத் துறை இலாகாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த தேசியப் பொங்கல் விழாவில் பல இன மக்களும் கலந்து கொண்டதோடு, பொங்கல் வைப்பது, கோலப் போட்டிகள் போன்ற இந்தியர்களின் பாரம்பரிய போட்டிகளில் கூட மற்ற இன மக்கள் கலந்து கொண்டதும், பரிசுகள் பெற்றதும் இன நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்கியது.

இன்று கொண்டாடப்பட்ட தேசியப் பொங்கல் விழாவில் முதல் வித்தியாசமாகத் திகழ்ந்தது இன்றைய விழா பத்துமலையில் உள்ள கியோவ் பின் சீனப் பள்ளி வளாகத்தில் அந்தச் சீனப் பள்ளியின் ஒத்துழைப்புடன் நடைபெற்றதாகும்.

#TamilSchoolmychoice

விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் வரவேற்பு பானமாக, தூய கரும்புச் சாறு இலவசமாக வழங்கப்பட்டதோடு, அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது. போட்டிகளின் சமைக்கப்பட்ட பொங்கல் சோறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிமாறப்பட்டது.

வேதமூர்த்தியின் உரை

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரையாற்றி பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, பொங்கல் இந்தியர்களின் பாரம்பரியப் பெருநாளாக நீண்ட காலமாகக் கொண்டாடப்பட்டு வந்தாலும், மற்ற இனங்களும் இணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சியைத் தருவதாகக் குறிப்பிட்டார்.

“இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் குறித்த சில சர்ச்சைகள் எழுந்தாலும், அதையும் மீறி இன்றைய தேசியப் பொங்கல் விழாவில் எல்லா இனத்தவர்களும் இணைந்து கொண்டாடுவது நமது ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளையும் எடுத்து வழங்கினார். பொதுமக்களோடு மதிய உணவு விருந்துபசரிப்பிலும் கலந்து கொண்டார்.

தேசியப் பொங்கல் விழாவின் சில படக் காட்சிகளையும் இங்கே காணலாம்:

நிகழ்ச்சிக்குப் பின்னர் கரும்பு பிழியும் இயந்திரத்தில் சொந்தமாக கரும்பு பானம் பிழிந்து அனைவருக்கும் வழங்கினார் வேதமூர்த்தி