Home One Line P2 டிரம்ப் பதவி பறிப்பு இல்லை – அமெரிக்க செனட் விடுவித்தது

டிரம்ப் பதவி பறிப்பு இல்லை – அமெரிக்க செனட் விடுவித்தது

715
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவியைப் பறிப்பதற்கு வகை செய்யும் அவர் மீதான நம்பகத் தன்மை குறித்த தீர்மானம் நேற்று புதன்கிழமை அமெரிக்க மேலவையில் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே தோற்கடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிரம்ப் தொடர்ந்து அமெரிக்க அதிபராக நீடிப்பார்.

இம்பீச்மெண்ட் எனப்படும் டிரம்ப் மீதான நம்பகத் தன்மை குறித்த தீர்மானம்அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அதுகுறித்த விவாதங்கள் கடந்த வாரம் முதல் நடைபெற்று, நேற்று புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

அமெரிக்க செனட் சபையில் டிரம்ப்பின் கட்சியான குடியரசுக் கட்சிக்கு (ரிபப்ளிக்) பெரும்பான்மை இருப்பதால், டிரம்புக்கு எதிரான நம்பகத் தன்மை குறித்த தீர்மானம் தோல்வியடைந்தது.

இதற்கிடையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று புதன்கிழமை ஆற்றிய உரை சர்ச்சைக்குரியதாகவும், நாட்டு மக்களைப் பிளவுபடுத்தும் விதத்திலும் அமைந்திருந்தது குறித்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

சுமார் 80 நிமிடங்கள் நீடித்த தனது நீண்ட உரையில் தன் மீதான நம்பகத் தன்மை குறித்த தீர்மானம் பற்றி டிரம்ப் எதுவுமே கூறவில்லை.

மேலும், தனது உரையின் பிரதி ஒன்றை அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் (சபா நாயகர்) நான்சி பெலோசியிடம் டிரம்ப் அளிக்க முற்பட்டபோது அவருடன் கைகுலுக்க நான்சி தனது வலது கையை நீட்டினார். ஆனால் டிரம்ப் அவருடன் கைகுலுக்காமல் திரும்பிக் கொண்டார். அமெரிக்கத் தொலைக் காட்சிகள் இந்த சம்பவத்தை திரும்பத் திரும்ப காட்டின.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப் பேசி முடித்ததும் அவரது உரை அடங்கிய பிரதியை தொலைக் காட்சி படப்பிடிப்புக் கருவிகளின் முன்னிலையில் அனைவரும் பார்க்க கிழித்துப் போட்டார் நான்சி பெலோசி.

பின்னர் பத்திரிகையாளர்கள் அவரைச் சந்தித்தபோது, “டிரம்பின் உரை முழுக்க முழுக்க உண்மையற்ற அம்சங்களைக் கொண்டிருந்தது. அதனால்தான் கிழித்துப் போட்டேன்” என நான்சி கூறினார்.

டிரம்புக்கு எதிரான நம்பகத் தன்மை குறித்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்ததில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி முக்கியப் பங்காற்றினார் என்பதால் டிரம்ப் அவர் மீது பகைமை பாராட்டி வருகிறார்.