கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட் ஆகியோர் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவு குறித்து சாட்சியமளிப்பதற்காக, அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்ற சாத்தியக்கூறை காவல் துறையினர் நிராகரிக்கவில்லை.
இது குறித்து சாட்சியமளிக்க அவர்களை அழைப்பதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதால், வழக்கின் முழு அறிக்கையையும் அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்ப முடியும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஜாமிட் பாடோர் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் அல்லது ஆரோக்கியக் குறைவு போன்ற காரணங்களைக் கூறி வருவதால் தற்போதைக்கு இது தள்ளிப்போவதாக அவர் கூறினார்.
“செயல்முறை கைகூடும். என்னால் தேதியை தீர்மானிக்க முடியாது, ஆனால் அவற்றுக்கான செயல்முறை செயலில் உள்ளது. விசாரணை ஆவணங்களை அரசாங்க தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்க அதிகாரிகள் பணியாற்றுவார்கள்.”
“நாங்கள் விரைவாக செயல்படலாம், ஆனால் அவர்கள் எங்களுக்கு ஒரு நியாயமான காரணத்தைத் தருகிறார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் அல்லது நீதிமன்ற வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
இது தொடர்ந்தால், நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்துவோம்.” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடந்த ஜனவரி 8-ஆம் தேதி 1எம்டிபி, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம் குறித்த உரையாடல்கள் பதிவை எம்ஏசிசி வெளியிட்டிருந்தது.
நஜிப் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் உட்பட 20 நபர்களின் உரையாடல்கள் பதிவுகள் வெளியிடப்பட்டன.