கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் ஒழுங்கு செயல்முறை முடிவடையும் வரை, பிகேஆரின் உதவித் தலைவர் பதவியிலிருந்து சுரைடா விலகி இருக்கப்போவதாக அவரது அரசியல் செயலாளர் நோர் ஹிஸ்வான் அகமட் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிகேஆர் தலைமையகத்திற்கு அனுப்பிய கடிதம் மூலம் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக ஹிஸ்வான் தெரிவித்தார்.
“பிகேஆர் தலைமையகத்தில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு விண்ணப்பக் கடிதம் அனுப்பப்பட்டது.”
“இந்த விண்ணப்பம் கிடைக்கப்பட்டதா இல்லையா என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை” என்று அவர் நேற்று புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
விடுப்பு விண்ணப்பம் கட்சிப் பதவிக்கு மட்டுமே தவிர, சுரைடாவின் அமைச்சரவை பதவிக்கு அல்ல என்றும் ஹிஸ்வான் கூறினார்.
வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சராக சுரைடாவின் பணி அல்லது கடமைகளை இந்த விண்ணப்பம் பாதிக்காது என்று அவர் கூறினார்.
“சுரைடாவின் அமைச்சக பணி நிரம்பியுள்ளது, மேலும், இக்கடிதம் அவரது பணி மற்றும் அமைச்சின் பொறுப்புகளை பாதிக்காது” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதியன்று, வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சராக இருக்கும் சுரைடாவுக்கு, பிகேஆர் தேசிய காங்கிரஸின் போது மற்றும் அதற்குப் பின் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு பிகேஆர் ஒழுக்காற்று வாரியம், காரணக் கடிதத்தை வழங்கியது.