கூச்சிங்: புஜூட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திங் தியோங் சன்னின் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை கூட்டரசு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை இரத்து செய்தது.
போர்னியோ போஸ்ட் செய்தியின் படி, இரண்டுக்கு எதிராக ஏழு என்ற பெரும்பான்மை தீர்ப்பில், டாக்டர் திங்கை புஜூட் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் நியமிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் முடிவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.
மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டதால், சரவாக் சட்டமன்றத்தில் ஒரு பிரேரணை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், புஜூட் சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் திங்கின் தகுதி கடந்த 2017-ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதியன்று இரத்து செய்யப்பட்டது.
இன்றைய வழக்கில் , கடந்த மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு திங்கின் தகுதிகளை இரத்துசெய்ய மாநில சட்டசபைக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சரவாக் மாநிலத் தேர்தலில், புஜூட் தொகுதியில் 1,759 வாக்குகள் பெரும்பான்மை பெற்று, டாக்டர் திங் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஹாய் கிங் சியோங் (தேசிய முன்னணி ), ஜோப்ரி ஜாரெய் (பாஸ் ) மற்றும் பாங் பாவ் டெக் (சுயேட்சை) போட்டியிட்டனர்.